கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியில் எம்.பியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா பெற்றுக்கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் அவர் மனந்திறந்து பதிலளித்துள்ளார்.
க்ளோப் தமிழ் இணையத்துக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கட்சிகுள் இருந்த தவறான நடவடிக்கைகள் காரணமாக பாராளுமன்றத் தேர்தலில் எனக்கு வெற்றிபெற முடியாது போனது. கூட்டமைப்புக்கு கிடைத்த தேசிய பட்டியலை எனக்கு பெற்றுக்கொடுக்க சுமந்திரன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், எமக்கு பெண் பிரதிநிதித்துவம் இல்லை. அதனால் பெண் ஒருவருக்கு இந்த தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன்.
தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிய பின்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் சென்று சந்தித்த போது கட்சியில் பெரும்பான்மையானவர்கள் தேசியப் பட்டியல் எம்.பி பதவியை எனக்கு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தனர்.
என்றாலும் இதுதொடர்பில் முடிவெடுக்க மீண்டும் இரா.சம்பந்தனை சந்திக்க செல்வதற்கு முதல்நாள் கட்சியின் செயலாளரால் கையொப்பமிட்டு அம்பாறைக்கு தேசியப் பட்டியல் எம்.பி பதவியை வழங்க வேண்டுமென்ற அறிவிப்பு வெளியானது. உண்மையில் அம்பாறைக்கு வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்திருக்கவில்லை. என்றாலும் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டு அந்த முடிவு எடுக்கப்பட்டமை தவறான ஒருவிடயமாகும்.
பதவிகளுக்காக நான் ஒருபோதும் அடிப்பணியவும் இல்லை. வாதாடவும் இல்லை. 11 தடவைகளுக்கு மேல் என்னை கைதுசெய்துள்ளனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலும் இருந்துள்ளேன். 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக என்னை நிறுத்த வேண்டுமென்று அனைவரும் ஓரணியில் இருந்த போதும் அந்த சந்தர்ப்பங்களை எமது இனவிடுதலைக்கான நான் விட்டுக்கொடுத்திருந்தேன். ஆகவே, எனக்கு பதவிகள் என்பது எப்போதும் முக்கியமாக இருந்ததில்லை. ஆனால், எனக்கு வரும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி நான் எமது மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.