ஜெனீவாவில் இந்தியாவின் ஆதரவு ஏன் இலங்கைக்கு எளிதாக கிடைக்கமாட்டாது?

0
567
Article Top Ad

ஜெனிவா உட்பட சர்வதேச அரங்குகளில் தனிப்பட்ட நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின் போது நடுநிலைமை வகிப்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகின்றபோதும் இலங்கை விடயத்தில் அது மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வரலாறு உணர்த்துகின்றது. 2009ம் ஆண்டு இலங்கைக்கு சார்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சார்பாக வாக்களித்த இந்தியா 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது. 2014ல் வாக்களிப்பில் இந்தியா பங்கேற்றிருக்கவில்லை .  2021ல் அதன் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பது இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. தமிழ்நாட்டில்  மாநில தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையிலும் இலங்கையில் இந்தியாவின் புவிசார் அரசியல் அபிலாஷைகள் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையிலும் இந்தியாவிற்கு முன்பாக உள்ள தெரிவுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இருக்க முடியாது. ஒன்று பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது இல்லையேல் 2014ம் ஆண்டில் செய்ததைப் போன்று நடுவுநிலைமை வகிப்பதே இந்தியாவிற்குள்ள தெரிவுகளாக இருக்க முடியும் .

இந்தியா கடந்த வருடங்களில் எவ்வாறு ஜெனிவாவில் வாக்களித்திருந்தது?

 

ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு எதிராக நாடுகளை அணிசேர்க்கும் முனைப்பை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் பகிரதப்பிரயத்தனத்தை மேற்கொண்டுவருகின்றது.

ஒரு மாதத்திற்கு முன்பாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குமுனையத்தை அபிவிருத்திசெய்வது தொடர்பாக இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை ஒருதலைப்பட்சமாக இரத்துச்செய்திருந்த இலங்கை அரசாங்கம்  ஜெனிவாவில் வாக்கெடுப்பு நெருங்கும் நிலையில் மேற்குமுனையத்தை வழங்குவதற்கு  ஒப்புதல் அளித்திருக்கின்றது.

பாரிய சர்ச்சையின் பின்னர், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வௌிநாட்டவர் கைப்பற்றுவதை நிறுத்திய போதும் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது

35 வருடங்களில் அபிவிருத்தி செய்து, நடைமுறைப்படுத்தி மீள கையளித்தல் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவரப்போவதை இலங்கை தொடர்பாக ஜெனீவாவில் செயற்படும் பிரித்தானியா தலைமையிலான பிரதான நாடுகள் குழு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தீர்மானத்தில் ஆரம்ப வரைவும் தற்போது வெளியாகி பல்வேறு வாதப்பிரதிவாதங்களை உருவாக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு ஆதரவாகவே ஜெனிவாவில் இந்தியா வாக்களிக்கும் என அண்மையில் வெளிவிவகார செயலாளர் ஒய்வுபெற்ற அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே கருத்துவெளியிட்டிருந்தார். இலங்கையை இந்தியா கைவிடக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இலங்கை இறுதி நேரத்தில் இவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டிருக்கின்ற போது,ஜெனீவாவில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு என்பது வெறுமனே தட்டிலேவைத்து தாரைவார்க்கப்படமாட்டாது என இந்தியாவின் முன்னணி ஒன்லைன் ஊடகங்களிலொன்றாக திகழும் Wireரின் இராஜதந்திர விவகாரத்திற்கு பொறுப்பான ஆசிரியர்  தேவிரூபா மித்ரா தெரிவித்துள்ளார் .

ஜெனிவாவிற்கான இந்தியத்தூதுவர் இந்திரா மணி பாண்டே 46வது தொடரின் ஆரம்பத்தில் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர் இது இறுதிவரை ஜெனிவாவில் அனைத்துதெரிவுகளையும் இந்தியா கொண்டிருக்கும் என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது’ என ஜெனிவாவிற்கான இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது இந்தியாவின் விருப்பம் என இந்தியா தெரிவித்துள்ளது.

‘இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை மற்றும் அவரது உரையின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

இலங்கையுடன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் பக்கத்து நாடு என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விஷயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.

1. இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு

2. சமத்துவம், நீதிஇ அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் விருப்பங்களுக்கு உறுதியளித்தல்

ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடு உள்ளது. இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ்ச் சமூகத்தின் உரிமைகளை மதிப்பதுஇ இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாகப் பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம். எனவே, தமிழ்ச் சமூகத்தின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.

நல்லிணக்கச் செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய விருப்பங்களுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையைக் கேட்டுக்கொள்கிறோம்.’

என ஜெனிவாவிற்கான இந்தியத்தூதுவர் தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டியுள்ள தேவிரூபா மித்ரா  இது எளிதாக இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு கிட்டமாட்டாது என்பதைக் கோடிகாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியா எதிர்வரும் தீர்மானத்தின் மீதான வாக்களிப்பில் எப்படி தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்பது தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் அனைத்து தெரிவுகளையும் தமக்கு முன்பாக இந்தியா வைத்துள்ளதென்பது தெளிவாகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனிவா உட்பட சர்வதேச அரங்குகளில் தனிப்பட்ட நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களின் போது நடுநிலைமை வகிப்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகின்றபோதும் இலங்கை விடயத்தில் அது மாறுபாடான நிலைப்பாட்டை எடுத்திருப்பதை வரலாறு உணர்த்துகின்றது. 2009ம் ஆண்டு இலங்கைக்கு சார்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது சார்பாக வாக்களித்த இந்தியா 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது. 2014ல் வாக்களிப்பில் இந்தியா பங்கேற்றிருக்கவில்லை . என்ற நிலையில் 2021ல் அதன் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பது இன்னமும் தெளிவற்றதாகவே உள்ளது. தமிழ்நாட்டில்  மாநில தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையிலும் இலங்கையில் இந்தியாவின் புவிசார் அரசியல் அபிலாஷைகள் பின்னடைவைச் சந்தித்துவரும் நிலையிலும் இந்தியாவிற்கு முன்பாக உள்ள தெரிவுகள் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இருக்க முடியாது. ஒன்று பிரித்தானியா தலைமையிலான மேற்கு நாடுகள் கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது இல்லையேல் 2014ம் ஆண்டில் செய்ததைப் போன்று நடுவுநிலைமை வகிப்பதே இந்தியாவிற்குள்ள தெரிவுகளாக இருக்க முடியும் .

ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதர்.