உலகப் புகழ்பெற்ற Children of Heaven படத்தின் தமிழ் மறு ஆக்கமாக வரும் அக்கா குருவி

0
675
Article Top Ad

சில கதைகள் மட்டுமே எக்காலத்துக்குமான ஜீவனைக் கொண்டிருக்கும். காலில் அணியும் ஒரு ஜோடி காலணிகளுக்காகப் போராடும் ஒரு அண்ணன் – தங்கை பற்றிப் பேசும் கதை

உலக சினிமாவில் என்றுமே தவிர்க்கப்படமுடியாத திரைப்படமாக ஈரானிய இயக்குநர் மஜீத் மஜிதியின் Children of Heaven “சொர்க்கத்தின் குழந்தைகள்” திரைப்படம் போற்றப்படுகின்றது.

உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’, ‘கங்காரு’ ஆகிய படங்களை இயக்கியவர் சாமி. ஒரு இடைவெளிக்குப் பிறகு ‘சில்ட்ரன் ஒஃப் ஹெவன்’ என்கிற புகழ்பெற்ற ஈரானியப் படத்தினை ‘அக்கா குருவி’ என்கிற தலைப்பில் அதிகாரபூர்வமாகத் தமிழில் மறுஆக்கம் செய்திருக்கிறார். சர்ச்சை இயக்குநர் என்று பெயரெடுத்திருந்தாலும் இம்முறை ஒரு உலக சினிமாவை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கும் அவரது முயற்சி பாராட்டப்படவேண்டியது .

இயக்குநர் சாமி இந்த மறு ஆக்கம் பற்றி நேர்காணலொன்றில் குறிப்பிடுகையில்

“சில கதைகள் மட்டுமே எக்காலத்துக்குமான ஜீவனைக் கொண்டிருக்கும். காலில் அணியும் ஒரு ஜோடி காலணிகளுக்காகப் போராடும் ஒரு அண்ணன் – தங்கை பற்றிப் பேசும் கதை. காலணிகள் என்பவை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்தவை. அவற்றை மையமாக வைத்து ஒரு கதை சுழலும்போது அதன் உலகப் பொதுமை கலாச்சார எல்லை, கால எல்லை என எல்லாவற்றையும் கடந்துவிடுகிறது. அந்த வகையில் இந்தக் கதையின் அமரத்துவம் என்னை எப்போதும் ஈர்த்தது. அத்துடன் எனது அம்மாவும் இந்தக் கதையை நான் மறுஆக்கம் செய்ய ஒரு காரணம்.

‘சிந்து சமவெளி’ படத்தை எடுத்தபோது நிறைய எதிர்ப்புகளைச் சம்பாதித்தேன். ஒருமுறை என்னுடைய அம்மா, ”கஷ்டப்பட்டு உழைக்கிறே.. எல்லோரும் ஒப்புக்கொள்ளும் படங்களை எடுத்துக்காட்டப்பா.. புத்தி சொன்னால் உலகத்துக்குப் பிடிக்காதப்பா..’ என்றார். அவரது வார்த்தைகள் என்னை மடைமாற்றின.அப்படித்தான் ‘கங்காரு’ படத்தை எடுத்தேன். ‘சாமியிடமிருந்து ஒரு தரமான படைப்பு’ என்று விமர்சனம் கிடைத்ததே தவிர, எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதனால்தான் பார்வையாளர்களால் நிராகரிக்க முடியாத கதைகளை இனி படமாக்குவோம் என்கிற முடிவுக்கு வந்து ‘சில்ட்ரன் ஒஃப் ஹெவன்’ படத்தின் மறுஆக்கத்தைக் கையிலெடுத்தேன்.”என்கிறார்.

‘சில்ட்ரன் ஒஃப் ஹெவன்’ படத்தின் மறுஆக்க உரிமையைப் பெறுவதில் சிரமங்கள் இருந்தனவா?

அந்தப் படத்தின் இயக்குநர் மஜித் மஜீதி நான் மதிக்கும் உலக சினிமா ஆளுமைகளில் ஒருவர். பெரும்பாலும் எளிய மக்களின் வாழ்க்கையை தனது படங்களில் உலகப் பொதுமையுடன் பிரதிபலித்தவர். முதலில் மின்னஞ்சல் வழியாக அவரைத் தொடர்புகொண்டேன். அதன் இந்திய உரிமை மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருப்பதைத் தெரிவித்தார். பின்னர் அவர்களிடமிருந்து தமிழுக்கான உரிமையைப் பெறுவது எளிதாகிவிட்டது.

என்னதான் உலகப் பொதுமை என்றாலும், தமிழ் வெகுஜன சினிமாவுக்கான மறுஆக்கம் எனும்போது பல மாற்றங்கள் செய்திருப்பீர்களே?

மஜித் மஜீதியின் கதையில் இருக்கும் ஆன்மாவை அப்படியே வைத்துக்கொண்டேன். கமர்ஷியலுக்காக ஒரு சிறிய, ஆனால் தூய காதல் கதையை இணைத்திருக்கிறேன். அது முதன்மைக் கதையை இன்னும் உயர்த்திப் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, கதை நடக்கும் இடம் முக்கியமாகப் பட்டது. நவீனம் நுழைந்துவிடாத பூம்பாறை என்கிற மலை கிராமத்தைத் தேர்வு செய்து படமாக்கியிருக்கிறேன். 11 வயதுள்ள மஹீன் கபீர் என்கிற சிறுவனும் 7 வயதான தாவியா மேரி என்கிற சிறுமியும் இக்கதையின் உயிர்நாதங்கள். மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். எங்களின் வேண்டு கோளை ஏற்றுஇ ‘பரியேறும் பெருமாள்’ கதிரும் ’96’ படத்தில் நடித்த வர்ஷா பொல்லம்மாவும் சிறப்புத் தோற்றம் ஏற்று நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் உத்பல் வி.நயனார் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பு இந்தப் படத்தின் தரத்தை மேம்படுத்தியிருக்கிறது.

இந்தப் படத்துக்குள் இளையராஜாவை எப்படிக் கொண்டு வந்தீர்கள்?

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் ‘சில்ட்ரன் ஒஃப் ஹெவன்’ படத்தைப் பற்றி இளையராஜா சார் கூறியிருந்தார். நான் போய் மறுஆக்கம் பற்றிச் சொன்னேன். ‘முதல்ல போய் அதை எடுத்துட்டு வா?. அப்புறம் சொல்றேன்’ என்றார். படத்தை முடித்து முழுமையாக்கி அவருக்குக் காட்டினேன்.’ஒரிஜினலைப்போல இதுவும் பெரிய அளவில் பேசப்படும்!’ என்று பாராட்டினார். காதல் காட்சிகளுக்கு அவரது பழைய பாடல்கள் தேவைப்பட்டதால் 11 பாடல்களை முறையே உரிமை பெற்று பயன்படுத்தியுள்ளோம். புதிதாக 3 பாடல்களை இந்தப் படத்துக்காக இசை அமைத்துக் கொடுத்தார். பின்னணி இசை மாபெரும் படைப்பாக உருவாகியிருக்கிறது.- என நம்பிக்கையோடு பதிலளித்திருக்கின்றார் இயக்குநர் சாமி.

ரசிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சினிமா காத்திருக்கின்றது என்பதில் ஐயமில்லை.