பிரித்தானிய ஓவியரான சச்சா ஜெப்ரி தீட்டிய உலகின் மிகப்பெரிய ஒவியம் சிறுவர் நலன்புரிக்காக நிதி திரட்டுவதற்கு 62 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டுள்ளது.
டுபாயில் கைவிடப்பட்ட ஹோட்டல் ஒன்றின் நடன மண்டபத்தின் 17,000 சதுர அடிப் பகுதியில் எட்டு மாதங்கள் செலவிட்டு ஜெப்ரி இந்த ஓவியத்தை திட்டியிருந்தார்.
70 பாகங்களாக இதனை விற்பதற்கு அவர் திட்டமிட்டிருந்த நிலையில், பிரான்ஸ் வர்த்தகரான அன்ட்ரே அப்தூன் ஒட்டுமொத்த ஓவியத்தையும் வாங்க முன்வந்துள்ளார். இதன்மூலம் உயிர்வாழும் ஓவியர் ஒருவரின் ஓவியம் ஒன்று ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட நிகழ்வாக இது சாதனை படைத்துள்ளது.
62 மில்லியன் டொலர் முழுமையான தொகையும் பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் பின்தங்கிய சிறுவர்களுக்கு உதவுவதற்காக டுபாய் கேயார், யுனிசெப் மற்றும் உலகளாவிய நன்கொடை அறக்கட்டளைக்கு செல்லும் என்று ஜெப்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் இந்த ஓவியம் உலகின் மிகப்பெரிய ஓவியமாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.