கனேடிய தமிழ் காங்கிரஸ் உட்பட 7 புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் 50 முஸ்லிம்கள் உட்பட 300ற்கும் மேற்பட்டவர்களும் இலங்கை அரசின் கறுப்புபட்டியலில் சேர்ப்பு

ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த அதிவிசேட வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ள போதும் இதுபற்றிய தகவல்கள் தற்போதே வெளியே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

0
300
Article Top Ad

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான இறுக்கமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலிக்கு மத்தியில் இலங்கை தொடர்பாக வீரியமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் 7 தமிழ் அமைப்புக்களையும் தனிப்பட்ட முஸ்லிம்கள் மற்றும் தமிழர்கள் உட்பட 300ற்கும் அதிகமானவர்களின் பெயர்களையும் இலங்கை அரசாங்கம் கறுப்புப்பட்டியலில் சேர்த்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 25ம் நாளான்று திகதியிடப்பட்ட இலங்கை ஜனநாயகக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 1968ம் ஆண்டின் 45ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012ம் ஆண்டின் 1ம் இலக்க ஐக்கிய நாடுகள் சபை ஒழுங்கு விதியின் பிரகாரம் பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின் நிரலுக்கான திருத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் நவம்பர் மாதம் 9ந் திகதிய 1992/25 அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் குறிக்கப்பட்ட ஆட்களின் நிரல் இதற்கான அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டவாறு இத்தால் திருத்தப்படுகின்றது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த அதிவிசேட வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ள போதும் இதுபற்றிய தகவல்கள் தற்போதே வெளியே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடை விதிப்பு தடை நீக்கம் பற்றிய பின்னணி

ராஜபக்ஸ அரசாங்கத்தினால் தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) இயக்கத்துடன்தொடர்பு வைத்திருந்தமை மற்றும் நிதி உதவி வழங்கியமை போன்ற காரணங்களின் அடிப்படையில் சில புலம்பெயர் அமைப்புக்களுக்கும் நபகர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் 2014 மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது

ரணில் -மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கம் பதிவிக்கு வந்ததையடுத்து இலங்கையில் நிலவும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் 2015ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 08 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 269 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருந்தது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை , அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை , தமிழ் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகிய அமைப்புக்களின் தடை நீக்கப்பட்டிருந்தது

எனினும் தமிழீழ விடுதலை புலிகள் ,   T.R.O எனப்படும் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு தமிழர் தொடர்பாடல் குழு , உலக தமிழர் அமைப்பு எனப்படும் W.T.M டப்ளியூ.ரி.எம் அமைப்பு, எல்லை தாண்டிய தமிழீழ அரசு எனப்படும் T.G.T.E , திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் உலக தமிழர் நிவாரண நிதியம் என அழைக்கப்படும் எச்.கியூ குழுமம் ஆகியவற்றின் மீதான தடைகள் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் 2015ல் பாதுகாப்பு அமைச்சினால் பிரசுரிக்கப்பட்டுள்ள 1941/44 என்ற இலக்கமுடைய விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது

தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் யாவை ?

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் பேரவை , அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை , தமிழ் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலக தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆஆகிய அமைப்புக்களே மீண்டும் தடை செய்யப்பட்டு கறுப்பு பட்டியில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஏழு அமைப்புக்களுடன் சேர்த்து மேலும் 388 தனி ஆட்களுடைய பெயர்களும் 25.02.2021 அன்று திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மத்திரமன்றி முஸ்லிம்கள் பலரது பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கை

இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் மேற்கொண்ட அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கை என அரசாங்கத்தின் நடவடிக்கையை வர்ணித்துள்ள சர்வதேச நெருக்கடிக்குழுவின் சிரேஷ்ட ஆலோசகர் அலன் கினன் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக வினைத்திறனுடன் செயற்படுகின்ற பெரும் எண்ணிக்கையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை கறுப்புப்பட்டியில் இணைத்துள்ளது. இதன்காரணமாக இலங்கையில் இருந்து இந்த அமைப்புக்களோடு மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புகளைக் கொண்டிருப்பர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தனி ஆட்கள் பற்றிய முழுமையான விபரங்களை அறிய: http://fiusrilanka.gov.lk/docs/UNSCR/List/2216_37/2216_37_T.pdf