ஆறு தவ்ஹீத் அமைப்புக்கள் உட்பட இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளே தடை செய்யப்படவுள்ளன என்று சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (07.04.2021) அறிவித்துள்ளார்.
ஐக்கிய தௌஹீத் ஜமாத், சிலோன் தௌஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத், அகில இலங்கை தௌஹீத் ஜமாத், ஜம்மயத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹம்மதியா,
தாருல் அதர் அல்லது ஜாமிஉல் அதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கைதா, சேவ் த பேர்ல்ஸ், சுபர் முஸ்லிம் ஆகிய இஸ்லாமிய அமைப்புகளே இலங்கையில் தடை செய்யப்படவுள்ளன.
இந்தப் 11 அமைப்புக்களில் 9 உள்ளுர் அமைப்புக்களுடன் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கைதா ஆகிய இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமையவே இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என்று சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டிற்குள் காணப்படும் பல்வேறு பிரச்சனைகளை திசைதிருப்புவதற்காகவே முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டுள்ளதாக தடைசெய்யப்படவுள்ள அமைப்புக்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
https://www.facebook.com/ctjofficial/videos/267668551661394