உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பாக இலங்கையில் 38 அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக அரசு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது என அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகத்தின் பிரதானி சட்டத்தரணி ராஜா குணரத்ன தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அந்த நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடிப்படைவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக 11 இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன எனவும் ராஜா குணரத்ன கூறினார்.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஐக்கிய தௌஹீத் ஜமாஅத், சிலோன் தௌஹீத் இமாஅத், ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத், அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத், ஜம்இய்யதுல் அன்சாரி, சுன்னத்துல் மொஹம்மதியா, தாருல் அதர் அல்லது ஜாமிஉல் அதர், ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்,, அல்கைதா, சேவ் த பேர்ல்ஸ், சுபர் முஸ்லிம் ஆகிய அமைப்புகளுக்கு இலங்கையில் செயற்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.