மக்களின் ஆணையை மீறினால் ராஜபக்ச அரசு கவிழ்வது உறுதி! – விமல் திட்டவட்டம்

0
223
Article Top Ad

“மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து – அந்த ஆணையை மீறாமல் ராஜபக்ச அரசு செயற்பட வேண்டும். இதுதான் இந்த அரசை நிறுவிய மக்களின் விருப்பம். எனவே, மக்கள் ஆணையை மீறிச் செயற்பட்டால் இந்த அரசு கவிழ்வதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது.”

– இவ்வாறு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்களின் ஆணையை மீற வேண்டாம் எனவும், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் அரசிடம் நாம் கோரிக்கை விடுக்கின்றபோது அரசுக்குள் இருக்கும் ஒரு சிலர் எம்மைக் குழப்பவாதிகள் என்று சாடுகின்றனர்.

நாம் ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராகச் செயற்படவில்லை. அன்று தொடக்கம் இன்றுவரை ராஜபக்ச குடும்பத்தையும் அரசையும் பாதுகாத்தே வருகின்றோம். இந்த அரசை நிறுவியதில் எமக்குப் பெரும் பங்கு உண்டு.

மக்களின் ஆணைக்கு மாறாக, நாட்டைத் தாரைவார்க்கும் வகையில் தீர்மானங்களை அரசு எடுத்தால் அதை நாம் பகிரங்கமாகவே எதிர்ப்போம்.

பிரதமர் தலைமையில் இன்று நடைபெறவுள்ள அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில் இதை நாம் தெளிவாக எடுத்துரைப்போம்” – என்றார்.