இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 202 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், 83 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.
ரிஷாத், ரியாஜ்
மீண்டும் கைது
– அதிகாலை சி.ஐ.டி. அதிரடி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய இருவரும் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னார் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், கொழும்பு பௌத்தாலோக மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன், கொழும்பு வௌ்ளவத்தையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் கிடைத்த சாட்சிகளின் அடிப்படையிலேயே ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.