‘ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த மன்னன்’: பிணங்களின் வாடையின் மத்தியிலே ஐபிஎல் ?

0
462
Article Top Ad

இந்தியாவிலே கொரோனா கோரத்தாண்டவமாடும் இந்த நாட்களில் ஐபிஎல் கிரிக்கட் போட்டிகள் தொடர்ந்தும் நடைபெறுவதைப் பார்க்கின்றபோது “ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன்போல்’ என்ற வாசகமே நினைவிற்கு வருகின்றது.

நாம் வாழும் காலத்தில் கண்ட மிகப் பெரிய பேரவலம் நம்முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கின்ற நிலையில் ஐபிஎல் கிரிக்கட் களியாட்டம் அவசியமானது தானா என்ற கேள்வி எழுகின்றது.

கடந்த மூன்று நாட்களாக ஒரு நாளைக்கு 300,000ற்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளநிலையிலும் தினமும் 2000ற்கு மேற்பட்டவர்கள் பலியாகியதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் கூறுகையிலும் நிலைமையின் பாரதூரம் துலாம்பரமாக தெரிகின்றது.

உயிரிழந்தர்கள் அனைவரது விபரங்களும் உத்தியோகபூர்வ அறிக்கையில் வெளியாகவில்லை என ஏற்கனவே பல செய்தி அறிக்கைகளைப் பார்த்தேன். தொற்றுக்குள்ளானவர்களின் உண்மையான எண்ணிக்கையும் அதிகமாக இருக்கவே வாய்ப்புண்டு . இந்தியாவின் நிலையோ மிகப்பரிதாபகரமானதாக மாறிக்கிடக்கின்றது.

ஒக்சிசன் பற்றாக்குறை ஒருபக்கம். வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஒரு பக்கம். வைத்தியசாலை உள்ளே இடம் கிடைக்கும் வரை அம்பியுலன்ஸ்ஸில் வண்டிகளில் காத்திருந்தே பலர் இறந்துள்ளனர். நெருங்கியவர்களது இறந்த உடல்களை தகனம் செய்ய யாருமே முன்வராத நிலை. தகனம் செய்யவும் வரிசையில் காத்திருப்பு. இப்படி அல்லோல கல்லோலமாய் இருக்குது அந்நாடு.

 

நேற்றைய தினம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் அடம் கில்கிறைஸ்ட் இந்தியாவின் கொரோன நிலை பற்றி ஒரு டுவிட் பதிவை இட்டிருந்தார். அதிலே கொரோனா பயங்கரமான எண்ணிக்கையாக இருக்கின்றபோது ஐபிஎல்லை நடத்துவரும் பொருத்தமற்றதல்லவா எனக்கூறியிருந்தார்.

ஆனால் ஒவ்வொரு இரவும் முக்கியமான கவனச் சிதறலாக இது அமைகிறதோ ? எனவும் கேள்வியெழுப்பியிருந்தார். கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் பேரழிவிற்கு மத்தியில் மக்கள் மனங்களை தொடர்ந்தும் வேதனைக்குள் தள்ளிவிடமால் ஒருவகையில் அவர்களது கவனத்தைச் சிதறடிக்க ஐபிஎல் போட்டிகள் வழிகோலுமா ? என்றவகையில் அவரது கேள்வி அமைந்திருந்தது.

வாழ்விற்கும் சாவிற்கும் இடையே இலட்சக்கணக்கான மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கிரிக்கட் போட்டிகளை நடத்துவதன் மூலம் எல்லாமே நாட்டில் சரியாக முன்னகருகின்றது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த யாரேனும் முனைவார்களே ஆனால் அது மிகப்பெரும் தவறாகும்.

இந்தியாவின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாட்டில் மீண்டும் வழமை நிலை ஏற்படும் வரை ஐபிஎல் பற்றி எந்தவிதமான செய்திகளையும் பிரசுரிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

மைதானத்தைச் சுற்றி எரியும் பிணங்களில் இருந்து வெளியாகும் பிணவாடை சூழ்ந்திருக்கையில் இலட்சக்கணக்கான மக்கள் அடுத்து என்ன நடக்குமோ என உயிரைக் கையிலே பிடித்து நிற்கையில் கிரிக்கட் அவசியமில்லை என்றே குளோப் தமிழ் இணையத்தளமும் கருதுகின்றது.

இனிமேல் நாமும் இந்தியாவில் தற்போதைய பேரவலம் தணிந்து வழமை நிலை திரும்பும் வரை ஐபிஎல் பற்றிய செய்திகளை பிரசுரிக்கப்போவதில்லை.