கொரோனா என பொதுவாக அழைக்கப்படும் கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றுநோய்ப் பரவல் ஆரம்பத்தது முதலாக இலங்கையில் ஒரே நாளில் பதிவான தொற்றாளர்கள் எண்ணிக்கை முதற்தடவையாக ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தச் செய்தியை பிரசுரிக்கும் போது இன்றைய தினம் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1096 ஆக இருந்தது. இது இன்னமும் அதிகரிப்பதற்கும் வாய்ப்புண்டு.
அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையினால் முழு சுகாதார கட்டமைப்பும் அதன் இயலுமையை இழக்கின்ற நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதை பல நாடுகளில் ஏற்பட்ட நிலைமை உணர்த்திநிற்கின்றது.
இந்த நிலையில் இலங்கையில் கடந்த பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி அரசாங்கத்தினால் கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 42 வைத்தியசாலைகளிலும் 37 தற்காலிக சிசிக்சை நிலையங்களிலும் மொத்தமாக 147 ICU beds அதிதீவிர சிசிச்சை நிலைய படுக்கைகளும் 11443 வழமையான படுக்கைகளுமே காணப்படுகின்றன.
தற்போதுள்ள ஐசியு படுக்கைகள் தற்போது கொரோனா தொற்றாளர்களால் நிறைந்துவழியும் நிலையில் இருப்பதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர். சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே கடந்த 26ம்திகதி தெரிவித்திருந்தார்.
இந்த எண்ணிக்கையுடன் மேலும் 70 அதிதீவிர சிசிச்சைப்பிரிவு படுக்கைகளை சேர்த்துக்கொள்வதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அபாய கட்டத்தில் இலங்கை என காதுகிழியக் கத்தினாலும் கேட்காத மக்கள் கூட்டம் உள்ள இந்த நாட்டில் மக்கள் சுயமாக தாமாகவே முன்வந்து முடங்கிக்கொள்வார்கள் என்று அரசாங்கம் எண்ணினால் அது பகற்கனவே!
இலங்கையை விட சில மில்லியன் மக்களே அதிகமாக உள்ளது பொருளாதாரத்தில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளதுமான கனடா நாட்டிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பை அடுத்து முடக்கநிலையை அரசாங்கம் அறிவித்திருந்தது.
ஆனால் இங்குள்ள மெத்தப்படித்த அரசியல் தலைவர்களோ சுகாதார துறையினரின் கோரிக்கைகளையும் அபாய அறிவிப்புக்களையும் உதாசீனப்படுத்தி நாடுதழுவிய முடக்கநிலையை அறிவிக்க தயாராக இல்லை. இது நாட்டை எங்கு கொண்டுபோய்விடுமோ என்று நினைக்கவே அச்சமாக உள்ளது.
இந்தியாவைப் போன்று இங்கு மோசமான நிலை இல்லை என்பது உண்மைதான் ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது போன்று பத்தில் ஒரு நிலை ஏற்பட்டாலே எம்மால் தாங்க முடியாது என்று கூறுவதற்கு மேதைகள் தேவையில்லை.