பைஸரின் வாய் மூல கொரோனா தடுப்பு மருந்து விரைவில் அறிமுகம்

0
277
Article Top Ad

வாய் மூலம் உட்கொள்ளும் வகையிலான கொரோனா தடுப்பு மருந்துகளை பைஸர் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தப் புதிய முயற்சி குறித்து பைஸர் நிறுவனத்தின் இயக்குனர் அல்பர்ட் போர்லா கூறும்போது, ‘ நாங்கள் கொரோனாவுக்கு எதிராக இரண்டு வகையான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினோம்.

ஒன்று தடுப்பூசி, மற்றொன்று வாய்வழியாக உட்கொள்ளும் மருந்து. குறிப்பாக வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தில் நிறைய நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. வீட்டிலிருந்தே மருந்து எடுத்துக் கொள்ளலாம்.

எல்லா நல்லபடியாகச் சென்றால் இந்த ஆண்டின் இறுதியில் வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா தடுப்பு மருந்துகளை எதிர்பார்க்கலாம்’ என்றார்.

உலகெங்கிலும் ஊசி வகையிலான தடுப்பு மருந்துகளே தற்போதைய நிலையில் பயன்பாட்டில் உள்ளன. பைஸர் நிறுவனம் வாய்வழியாக உட்கொள்ளும் மருந்தை அறிமுகப்படுத்தினால் ஏராளமான மக்களை கரோனா தடுப்பு மருந்து சென்றடைவதற்கு ஏதுவாக இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது.

இதனைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.