இந்தியன் 2 : ஷங்கர் -லைகா சமரசப் பேச்சுக்கள் தோல்வி

0
377
Article Top Ad

பெரும் நட்சத்திரப்பட்டாளத்துடனும் பொருட்செலவிலும் ஆரம்பமான பலத்த எதிர்பார்ப்புடன் ஆரம்பமான இந்தியன்-2 திரைப்படம் முடங்கியுள்ள நிலையில் அதனை மீள ஆரம்பிக்கும் வகையில் இயக்குநர் ஷங்கருக்கும் படத்தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கும் இடையே நடைபெற்ற சமரசப்பேச்சுக்கள் எவ்வித முன்னேற்றமும் இன்றி தோல்விகண்டுள்ளன.

உலகநாயகன் கமல் நடிக்கும் இந்தியன் – 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கடந்த சனிக்கிழமை ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஜூன் முதல் அக்டோபர் மாதத்துக்குள் படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்கவில்லை எனவும், ஜூன் மாதத்திலேயே படத்தை முடித்து கொடுக்க தயாரிப்பு நிறுவனம் வலியுறுத்தியதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

கமல்ஹாசனுடன் மறைந்த நடிகர் விவேக், டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் போன்ற நட்சத்திரங்கள் இதில் உள்ளனர்.

கடந்த வருடம் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது க்ரேன் அழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்த போது கொரோனா முதல் அலை தொடர்ந்து இந்திய மாநில தேர்தல்கள் அதன் பின்னர் இரண்டாம் கொரோனா அலை என மாறிமாறி தடங்கல்கள் ஏற்பட்டுவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.