அதிகரித்துச்செல்லும் கொரோனா தொற்றாளர்கள்: மருத்துவர்களின் “லொக்டவுண்” ஆலோசனைக்கு தலைசாய்க்க நேரிடுமா அரசாங்கம்?

0
270
Article Top Ad

இலங்கையில் இன்றையதினமும் முன்னெப்போதுமில்லாத அளவில் அதிகரித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்தச் செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் போது இன்றுமாத்திரம் 1,662 புதிய தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 22ம் திகதி முதல் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக 600ற்கு அதிகமாகவே இருந்துவருகின்றது. அதிலும் கடந்த 27ம்திகதிமுதல் நாளாந்தம் இனங்காணப்படுகின்றவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இன்று தொடர்ச்சியாக நான்காவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவானதுடன் நேற்றும் இன்றும் 1500ற்கும் மேற்பட்டவர்கள் பதிவானமை அதிர்ச்சியளிக்கின்றது.

கடைசி 9 நாட்களிலும் மொத்தமாக 10000 மேற்பட்ட தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக 6வது நாளாக கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை சடுதியான அதிகரிப்பைக் காண்பித்துவருகின்ற நிலையில் நாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நாடுதழுவிய முடக்க நிலையை அறிவிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஏற்கனவே வழங்கியுள்ள ஆலோசனைக்கு தலைசாய்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு அரசாங்கம் தள்ளப்படுமா ? என்ற கேள்வி எழுகின்றது.

நிலைமை கட்டுமீறிப் போனால் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படலாம் என்பதை ஏற்கனவே கொரோனா நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவுள்ளவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இலங்கையின் சுகாதாரக்கட்டமைப்பின் யதார்த்த நிலைமையை உணர்ந்து ஏற்கனவே நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்து நாட்டை முடக்கநிலைக்கு உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்திடம் விடுத்திருந்தனர்.

எனினும் நாட்டிலுள்ள மக்களது பொருளாதார நிலை மோசமாக பாதிக்கும் என்ற காரணத்தால் நாட்டை முடக்குவதற்கு லொக்டவுண் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் தயக்கம் காண்பிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் இப்படியே சடுதியான அதிகரிப்புக்காணப்படும் நிலையில் அடுத்துவரும் நாட்களில் அரசாங்கம் விரும்பாவிடினும் கூட நாட்டை முடக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.