வீரர்கள் பலருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியன் பிரிமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் எப்போது மீள ஆரம்பமாவதற்கு சாத்தியமுள்ளது ?
இந்தக் கேள்விக்கான பதிலை அறிவதற்கு கொரோனாவின் தற்போதைய தீவிரநிலையையும் இந்திய கிரிக்கட் அணியின் சர்வதேச நிகழ்ச்சி நிரலையும் வைத்தே பதில் தேடமுடியும்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாளாந்தம் 4லட்சம் வரையான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுவருகின்றனர்.
இந்த எண்ணிக்கை அதிகரித்து இம்மாத இறுதியில் நாளாந்தம் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்வுகூறல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதனைப் பார்க்கும் போது இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இந்த மே மாதத்திலோ ஜுன் மாத முற்பகுதியிலோ மீள ஆரம்பிக்க வாய்ப்பே இல்லை.
ஐபிஎல்லை இடைநிறுத்தும் அறிவிப்பை விடுத்த போது பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில் ‘2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசன் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகத்தினர், ஒளிபரப்பாளர்களுடன் பேசி வருகிறோம். நாட்டில் உள்ள சூழல், மக்கள் மனநிலை ஆகியவற்றைக் கவனிப்பதால், தற்காலிகமாக ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கிறோம். இந்த மாதத்தில் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்பில்லை.
வீரர்களின் உடல்நிலை பிசிசிஐக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். விரைவில் மீண்டும் கூடி தொடர் குறித்தும் எப்போது தொடரை முடிப்பது என்றும் முடிவு செய்வோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
எதிர்வுகூறலின் படி மே மாத இறுதியில் உச்சம்பெறும் கொரோனா வீழ்ச்சியடைவதற்கு ஜுன் மாதம் இரண்டாம் மூன்றாம் வாரங்கள் ஆகவாய்ப்புண்டு.
ஆனால் ஜுன் மாதம் 18ம் திகதி முதல் 22 திகதி வரை இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானத்தில் உலக டெஸ்ற் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியுஸிலாந்து அணியை எதிர்கொள்ள அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்னர் இந்திய அணிக்கு ஓகஸ்ற் மாதம் 4ம் திகதிதான் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ற் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
அப்படிப்பார்க்கும் போது தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் போட்டிகளை மீள ஆரம்பிப்பது ஜுன் மாத பிற்பகுதியில் அன்றேல் ஜுலை மாத முற்பகுதியிலேயே சாத்தியமாகும் .
கொரோனாவால் பல்லாயிரக்கணக்கானவர்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டு கொண்டிருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது ஏற்புடையதல்ல அழுத்தமாகக்கூறி இந்தக் கட்டுரையை எழுதி அதன்பின்னர் ஐபிஎல் போட்டிகள் தொடர்பான செய்திகளைப் பிரசுரிப்பதை கடந்த மாதம் 25ம்திகதியுடன் குளோப் தமிழ் இடைநிறுத்திக்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
மக்கள் பேரழிவை எதிர்கொண்டிருக்கையில் அதுதொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத்தவிர்த்து அன்றேல் அதனை மூடிமறைக்கும் வகையில் ஐபிஎல் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் . தற்போது ஐபிஎல் இடைநிறுத்தப்பட்டிருப்பது சரியான தீர்மானம்.
இந்த நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டால் மாத்திரமே ஐபிஎல் போட்டிகள் மீள ஆரம்பமாகவேண்டும். அப்படியின்றி பிணவாடையின் மத்தியில் ஐபிஎல் நடைபெற்றால் அதுதொடர்பான செய்திகளை பிரசுரிக்காதிருக்கும் தீர்மானம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.