மூன்றுமாத பச்சிளம் பாலகி உட்பட இன்று 26 கொரோனா மரணங்கள் :- ஜுனில் இறப்பு நாளொன்றுக்கு 100 ஆக அதிகரிக்கும் -ரணில் எச்சரிக்கை

0
281
Article Top Ad

இலங்கையில் இன்று திங்கட்கிழமை (10/05 ) வெளியிடப்பட்ட தரவுகளுக்கு அமைவாக கொரோனா காரணமாக 26 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதில் 3 மாதங்களேயான பச்சிளம் பாலகியும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இதுவரை இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கடந்த மே முதலாம் திகதி முதல்  இன்று மே 10ம் திகதி  வரையான காலப்பகுதியில் 20,156 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

நேற்று இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக 2000ற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டநிலையில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 2000ற்கு அதிகமானவர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று 2,659 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இன்று மே 10ம்திகதி 2ஆயிரத்து 624 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு எண்ணிக்கை அதிகரித்துச்செல்லும் நிலையில்  மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காவிட்டால் நாடு பாரிய ஆபத்திற்கு முகம் கொடுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொரோனா நிலைமை மோசமடைந்து வருகிறது என்றும் தடுப்பூசிகள், ஒக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் 100 க்கும் மேற்பட்ட நாளாந்த இறப்புக்கள் பதிவாகலாம் என்ற தரவுகளை சேகரிக்கும் நிறுவனத்தை மேற்கோளிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டம் அரசியல் அல்ல என்றும் அரசாங்கதை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல என்றும் சுட்டிக்காட்டிய ரணில் விக்ரமசிங்க மக்களின் உயிரைப் பாதுகாப்பதாகும் என்றும் கூறினார்.

எனவே தற்போது கொரோனா பரவலுக்கு எதிராக செயற்படாமல் விட்டால் பல உயிர்களை இழக்க வேண்டி ஏற்படும் என்றும் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்தார்.