கொரோனா காரணமாக உயிரிழப்பவர்களின் வங்கிக் கணக்குகளின் கதி என்ன?

0
306
Article Top Ad

 

டெய்லி எப்ரி பத்திரிகையின் பிரதி ஆசிரியர் மேரி ஆன் டேவிட் இன்று இதுதொடர்பாக போட்ட டுவிட்டர் பதிவே இந்தத் தலைப்பில் எழுதத் தூண்டியது.3

கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளிலும் அண்மைக்காலமாக மரணங்கள் அதிகரித்துள்ளன.

நோய்வாய்ப்பட்டவர்கள் ,வயதானவர்கள், மட்டுமன்றி நல்ல தேகஆரோக்கியத்துடன் காணப்பட்டவர்களும் திடீரென உயிரிழக்கும் செய்திகளை ஊடகங்களில் பார்க்கின்றோம்.

இந்த நேரத்தில் இறந்தவர்களின் குடும்பத்தவர்கள் நிலை பெரிதும் தர்மசங்கடமாகின்றது. குடும்பத் தலைவன் அன்றேல் தலைவி உயிரிழந்துவிட்டால் உரிய ஏற்பாடுகள் செய்யப்படாதவிடத்து அவர்களை நம்பியிருப்பவர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்.

வங்கியிலே கணக்கு வைத்திருப்பவர்கள் தமக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால் தமக்குப்பின்னர் தமது கணக்கு யாருக்கு போய்ச் சேரவேண்டும் என்று வங்கியில் குடும்பத்தைச் சேர்ந்தவரையோ அன்றேல் நெருக்கமான நம்பிக்கையுள்ள வேறொருவரையோ நியமித்திருந்தால் வங்கிக்கணக்கிலுள்ள பணம் அவருக்கு சென்றடையும்.

அப்படி இல்லாவிடின் வங்கிக் கணக்கிற்கு என்ன நடக்கும் ? என அறிய இலங்கையிலுள்ள தனியார் வங்கியொன்றில் சிரேஷ்ட ஆலோசகராக பணியாற்றும்  திலானி பெரேராவிடம்  ஒருவரிடம் வினவினேன்.

“வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே தனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் என்று முன் ஆயத்தமாக வேறொருவரை நியமித்திருப்பின் உயிரிழந்தபின்னர் அந்தக் கணக்கும் அதிலுள்ள நிதியும் நியமிக்கப்பட்டவருக்கு சென்றடையும்.

இணைந்த Joint Account கணக்குகளைக் கொண்டிருந்தால் ஒருவர் இறந்தால் அவர் இறந்ததை இறப்புச்சான்றுப்பத்திரம் மூலம் உறுதிப்படுத்தினால் அந்தக் கணக்கு மற்றையவரைச் சென்றடையும் . இதனைத்தவிர உறுதிப்பத்திரத்தை சட்டரீதியாக சட்டத்தரணி ஊடாக எழுதிவைத்திருந்தால் அதற்கு அமைய வங்கிக் கணக்கு சென்றடையும். இவற்றைச் செய்யாது விட்டால் தான் சிக்கல்கள் ஏற்படும்.

இவ்வாறான நிலையில் சாட்சியத்தை உறுதிப்படுத்தும் testimony case வழக்கு போடப்பட்டு தாமே கணக்கிலுள்ள பணத்திற்கு உரித்துடையவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதற்கு குறைந்த பட்சம் 6 மாதங்கள் முதல் ஒரு வருடமாகலாம். பல வருடங்களாக இழுத்தடிக்கப்படும் வழக்குகளும் உள்ளன. இது மிகவும் சிக்கல் நிறைந்த நடைமுறையாகும். ” என திலானி பெரேரா தெரிவித்தார்.

“இப்படியான சிக்கல்களையும் இழுத்தடிப்பையும் தவிர்ப்பதற்கு குடும்பத்தில் இருப்பவர்கள் அவசர கால நிலைமை எப்போதும் ஏற்படுக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து இதுதொடர்பாக குடும்ப அங்கத்தவர்கள் முன்னிலையே கலந்தாராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

கணவன் தனது வங்கிக் கணக்குக்கு மனைவியையோ அன்றேல் பிள்ளைகளையோ நியமிக்க முடியும். அன்றேல் குடும்பத்திலுள்ள அனைவரையும் நியமித்து அவர்களுக்கு தமது கணக்கிலுள்ள நிதி எந்த விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என குறிப்பிடமுடியும்.

இப்படியே மனைவியும் செய்யலாம். தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர நண்பர்கள் உறவினர்களையும் கூட வங்கிக் கணக்கிற்காக நியமிக்க முடியும் “என அவர் சுட்டிக்காட்டினார்.

நீங்கள் இறந்தால் மட்டுமன்றி உங்களுக்கு ஏதேனும் பாரதூரமான நோய் ஏற்பட்டால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டால் உங்கள் வங்கிக் கணக்கை கையாள்வதற்கும் இவ்வாறு இன்னுமொருவரை அன்றேல் பலரை நியமிப்பது மிக்க பயனுடையதாக அமையும்.

அப்படி நீங்கள் செய்யத்தவறும் இடத்து அந்தக்கணக்கு வங்கிக்கு சென்றுவிடும் சாத்தியமும் உள்ளது என்பதை மறந்துவிடவேண்டாம்.

ஒருவர் உயிருடன் இருக்கும் போது தமது வங்கிக் கணக்கிற்கு வேறொருவரை நியமிக்கும் போது அவர் உயிருடன் இருக்கும் போதே நியமிக்கப்பட்டவர் பணத்தை எடுத்துவிடக்கூடுமா ? என்ற அச்சம் பலரிடம் காணப்படுகின்றது.

எனினும் அது சாத்தியமில்லை. உரிய சான்றுப்பத்திரங்கள் குறிப்பாக மரணச் சான்றிதழ் போன்றவற்றைக் காண்பித்த பின்னரே கணக்கிலுள்ள பணத்தை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.