இலங்கையில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் முழு நேரப் பயணக் கட்டுப்பாடு நேற்றிரவு 11 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
முழு நேரப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் 24 மாவட்டங்களின் நகரங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வீதிகளில் முப்படையினரும், பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரைத் தவிர, வேறு எந்தவொரு தரப்பினரும் வெளியில் செல்லக்கூடாது எனப் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் இந்தக் காலப் பகுதியில் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
எவரேனும் ஒருவர் சுகயீனமடையும் பட்சத்தில் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதி வரை வெளியில் செல்ல தேசிய அடையாள அட்டை நடைமுறை செலுபடியாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.