இலங்கையில் உருமாறிய கொரோனா அதிதீவிரமாக பரவிவரும் நிலையிலும் மரணங்களில் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் நிலை மக்கள் எந்தத் தடுப்பூசியையேனும் உடனடியாக ஏற்றிக்கொள்ளவேண்டும் என சமுதாய மருத்துவ விசேட நிபுணர் டொக்டர் முரளி வல்லிபுரநாதன் தெரிவிக்கின்றார்.
இதேவேளை நோய் அறிகுறிகளற்ற கொரோனா தொற்றாளர்களை வீடுகளிலேயே தங்க வைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மே 17ஆம் திகதி முதல், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் விசேட வைத்தியர்களின் கண்காணிப்பின் கீழ் குறித்த தொற்றாளர்களை வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாறான அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் பெருமளவில் காணப்படுவதாகவும், அவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதில் நிலவும் சிக்கல்கள் காரணமாக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு வீடுகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் தொற்றாளர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் தோன்றும் நிலையில் அவர்களை வைத்தியசாலைக்கு மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென, அவர் சுட்டிக்காட்டினார்.