கொரோனாத் தொற்று அறிகுறி உள்ளவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதீர்!  – மருத்துவர் சுதத் சமரவீர கோரிக்கை

0
241
Article Top Ad

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கொரோனாத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளக்கூடாது எனத் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொரோனாத் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் தொற்று இருக்கலாம் எனச் சந்தேகிப்பவர்களும் கொரோனாத் தொற்று உறுதியானவர்களும் இவ்வாறு கொரோனாத் தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றியபோதே வைத்தியர் சுதத் சமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் உடம்பில் ஏற்கனவே கொரோனா வைரஸ் உள்ளமையால் தடுப்பூசி மூலமாக நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க முடியாது.

எனவே, தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கும் கொரோனாத் தொற்று இருக்கலாம் எனச்  சந்தேகிப்பவர்களுக்கும் தடுப்பூசி போடுவதைத் தாமதப்படுத்தியுள்ளோம்.

கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் அறிகுறி அற்றவர்கள் மற்றும் குறைந்த அறிகுறிகளை காண்பிப்பவர்கள் வைத்தியசாலை மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10 நாள் வரை தனிமைப்படுத்தப்படுவார்கள்.

10 முதல் 14 நாட்களுக்குள் வைரஸின் தாக்கம் குறைவடைவதுடன், நோயாளியிடமிருந்து ஏனையவர்களுக்குத்  தொற்றுப் பரவல் அடைவது முற்றாக நீங்கிவிடும்.

எனவே, 10 நாட்களின் பின்னர் கொரோனாத் தொற்றாளர்கள் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றார்கள். அவர்கள் வீட்டில் மேலும் 4 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்பு தமது அன்றாட நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுக்க முடியும்” – என்றார்.