ராஜபக்ச அரசு தனிமைப்படுத்தல் சட்டங்கள் மூலம் எதிர்க்கட்சியினரை அடக்க முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) குற்றம் சாட்டியுள்ளது.
ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு எதிராகப் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றனர்.
‘போர்ட் சிட்டி’ சட்டமூலத்துக்கு எதிராகவே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார ஒழுங்கு விதிகளைப் பேணியே எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டோம்.
ஆனால், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் எமக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்றனர்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியைப் பயப்படச் செய்து, அரசின் குறைகளை மறைப்பதாகும்” – என்றார்.