திட்டமிட்ட படி ஜுலையில் டோக்கியோ ஒலிம்பிக் !

0
241
Article Top Ad

தற்போதைய கொரோனா தீவிர பரவல் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் நடத்துவதற்கு அந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் போட்டிகள் திட்டமிட்டவாறு நடக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 8 வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று இன்னும் அடங்காமல் இருப்பதால் பல்வேறு நாடுகளும் போட்டியை இப்போது நடத்திட எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

போட்டி நடக்கும் டோக்கியோவிலேயே அதனை இரத்துச் செய்ய கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாகவே குரல் எழுப்பி வருகின்றனர்.

3 வார காலம் நடக்கும் போட்டியால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. குறிப்பாக பங்கேற்கும் நாடுகளும் வீர, வீராங்கனைகளும் மிகவும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகளைக் கண்காணித்து வரும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் துணைத் தலைவர் ஜான் கோட்ஸ், திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என்று ஊடகங்களோடு உரையாடும்போது குறிப்பிட்டுள்ளார்.

டோக்கியோவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும் போட்டி பாதிக்கப்படாது என்று அவர் உறுதி கூறியுள்ளார்.

கோவிட் – 19 விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் போட்டிக்கு வரும் வீர வீராங்கனைகளில் எழுபத்தைந்து சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பார்கள் என்றும் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிற்காக வரும் ஒவ்வொரு குழுவுடனும் மருத்துவக் குழு ஒன்று இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் டோக்கியோவில் இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டுள்ளபடி நடைபெறும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றிருக்கிறது.