தடுப்பூசி வழங்கும் முறைக்கு எதிராக கிராம சேவகர்கள் பணிப்பகிஷ்கரிப்பு! – சங்கத்தின் தலைவர் அறிவிப்பு

0
290
Article Top Ad

நாட்டில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் முறைமைக்கு எதிராக பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளோம் என்று இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி நாடு முழுவதும் மொத்தம் 12 ஆயிரம் கிராம சேவகர்கள்  இன்று நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளனர் என்று இலங்கை கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கோடிக்கார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பத்தில் முறையாக முன்னெடுக்கப்பட்டு வந்தபோதும், தற்போது முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. இதனை நாங்கள் முழுமையாக  எதிர்க்கின்றோம்.

இலங்கையில் கொரோனாத் தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின்போது கிராம  சேவகர்கள் இரவு – பகலாகப் பணியாற்றினர். எம்மில் ஒருவர் இறந்துள்ளார். மேலும், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலைமையைக் கருத்தில்கொண்டு, கிராம சேவகர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொண்ட போதும்  இதுவரை அரசால் சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முறைகேடாக நடந்துகொண்டுள்ளனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது” – என்றார்.

தடுப்பூசித் திட்டம் தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.