விதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை.. நாளை முதல்.. பேஸ்புக், டிவிட்டர் இந்தியாவில் ‘தடை’ செய்யப்படுகிறதா?

0
169
Article Top Ad

இந்தியாவில் நாளை முதல் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சில சமூக வலைத்தளங்களும், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்களும் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதோடு இந்த நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சமூக வலைத்தளங்களையும் ஓடிடி தளங்களையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நீண்ட காலமாக முயன்று வருகிறது.

இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் மூன்று முக்கிய விதிகளை ஏற்கவேண்டும் என்று ஒரு அறிவித்தலை மத்திய அரசு வழங்கியிருந்தது.

இந்த விதிகள் பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர் இன்ஸ்ட்டா உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உள்ளடக்கங்களையும்  ஓடிடி தளங்களில் வரும் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கங்களையும் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.

எப்படி?

அதன்படி இந்த சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடி தளங்கள் தங்களிடம் வரும் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.

அரசு வைக்கும் முறைப்பாடுகளை இந்த அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு பின் அரசு நீக்க சொல்லும் கணக்குகள் நிகழ்ச்சிகள் வீடியோக்கள் உள்ள உள்ளடக்கங்களை நீக்க வேண்டும்.

அதேபோல் சமூக வலைதளங்களில் வரும் உள்ளடக்கங்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும்.

குழு

இந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் இடம்பெறுவார்கள். இந்த குழுதான் சமூக வலைத்தளங்களில் வரும் உள்ளடக்கங்களுக்கு எதிரான முறைப்பாடுகளில் நடவடிக்கை எடுக்கும் உச்சபட்ச அதிகாரம் கொண்டது என்று மத்திய தகவல்கள் தொழில்நுட்ப துறை மூலம் கொண்டு வரப்பட்ட புதிய விதியில் குறிப்பிட்டு இருந்தது.

அதாவது டிவிட்டர் நிறுவனம் ஒரு டிவிட்டை நீக்க வேண்டாம் என்று சொன்னாலும் இந்த குழு நீக்கும்படி கூறினால் அதை நீக்கித்தான் ஆகவேண்டும். இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டு 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த விதியில் கூறப்பட்டு இருந்தது.

எல்லோருக்கும்

அமேசான், டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், நெட்பிளிக்ஸ் என்று எல்லோருக்கும் இந்த விதி பொருந்தும். இந்த விதிகளை ஏற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்த 3 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் இன்றோடு முடியும் நிலையில் இதுவரை பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டா என்று யாரும் மத்திய அரசின் புதிய கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

விதி

இந்த விதிகள் பற்றி எங்கள் தலைமையகத்திடம் ஆலோசித்து வருகிறோம். இதை பற்றி ஆலோசிக்க மேலும் 3 மாதம் அவகாசம் வேண்டும் என்று டிவிட்டர் கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதற்கு கூடுதல் அவகாசம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் நாளை முதல்பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மத்திய விதி

மத்திய அரசின் விதியை பின்பற்றாத காரணத்தால், பாதுகாப்பு அனுமதிகளையும் தகுதிகளையும் இந்த நிறுவனங்கள் இன்றோடு இழக்கும். இதனால் இந்த நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளை முதல் இந்த செயலிகள் சிக்கலின்றி இயங்குமா அல்லது தடை செய்யப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here