கொரோனா மரணங்களால் இலங்கை மிக மோசமான கட்டத்தில்! – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

0
272
Article Top Ad

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் 53 வீதத்தால் உயர்வடைந்துள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், 83 வீதமான உயிரிழப்புகள் அதிகளவில் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன என்றும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் பரவல் நிலைவரம் மற்றும் மரணங்கள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் மோசமான கட்டத்திலேயே உள்ளது. நாடு இரு வாரங்கள் முடக்கப்பட்டுள்ள காரணத்தால் ஓரளவு சாதகமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும்.

ஆனாலும், இந்த முடக்க காலத்துக்குள் அதிகளவானவர்களுக்குத் தடுப்பூசிகளை ஏற்றும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

மேலும், கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை பார்க்கையில் இதற்கு முன்னர் இருந்ததை விடவும் கடந்த வாரத்தில் மரணங்களில் எண்ணிக்கை 53 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.

இதற்கு மக்களின் சன நெரிசல் மற்றும் சுகாதார வழிமுறைகளை மக்கள் முறையாகப் பின்பற்றாமையே காரணமாகும். ஏற்பட்ட மரணங்களில் 75 வீதமான மரணங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகும்.

இதேவேளை, உயரிழந்தவர்கள், தொற்றா நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்” – என்றார்

மே மாதம் முதலாம் திகதி முதல் 29ம்திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 727 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கு முதல் ஒரே மாதத்தில் அதிக மரணங்கள் கடந்த பெப்ரவரி மாதத்திலேயே பதிவாகியிருந்தது அப்போது 155 மரணங்கள் பதிவாகியிருந்தன.

இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் கடந்த 2020 வருடம் மார்ச் மாதம் 28 திகதி பதிவானமை குறிப்பிடத்தக்கது.