Covid-19 ஆய்வு கூடத்தில் இருந்து கசிந்ததா? முழுமையான விசாரணைகள் நடத்தப்படாவிடின் உலகம் ‘Covid- 26 மற்றும் Covid -32’ ஐ எதிர்நோக்க நேரிடும்

0
316
Article Top Ad

முதலில் எங்கிருந்து Covid-19 என்ற புதிய கொரோனா வைரஸ் உருவானது என்பதைப் பற்றிய முழுமையான ஆய்வுநடத்தப்படவேண்டும் என நிபுணத்துவமிக்கவர்களிடையே வலுத்துவரும் கோரிக்கைகளுக்கு ஆதரவாக உலகின் முன்னணி விஞ்ஞானியொருவர் குரல்கொடுத்துள்ளதுடன் பொதுச்சுகாதாரத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் -19 எங்கிருந்து உருவானது என்பதை நாம் முழுமையாக விளங்கிக்கொள்ளாவிடில் Covid-26 மற்றும் Covid-32  ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும் என உலகில் வைரஸ் பற்றிய முன்னணி ஆராய்ச்சியாளர்களிலொருவரும் நுண் மூலக்கூறு நோய்க்கிருமியியல் மற்றும் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியருமான பீற்றர் ஹோடெஸ் Peter Hotez தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகளாவிய பெருந்தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கு கொவிட்-19 பற்றிய தீர்க்கமான முடிவுகளுக்கு வரவேண்டியது மிக அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா உருவானது எங்கே? விசாரணை அறிக்கையை சமர்பிக்க அமெரிக்க உளவு அமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடன் உத்தரவு

கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பது குறித்த விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களில் அமெரிக்க உளவு அமைப்பு சமர்ப்பிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரத்தில் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து தோன்றியதா விலங்குகளிடமிருந்து தோன்றியதா அல்லது ஆய்வகத்திலிருந்து தோன்றியதா என்பது குறித்த விசாரணை அறிக்கையை அடுத்த மூன்று மாதங்களில் (90 நாட்களில்) அமெரிக்க உளவு அமைப்பு சமர்பிக்க வேண்டும்’ என்று என்று தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

முன்னதாக ‘கொரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியது என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை. கொரோனா வைரஸ் இயற்கையாகவே உருவானதாகக் கூறப்படுவதை தன்னால் நம்பமுடியவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

இதுகுறித்த திறந்த விசாரணை வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து வெளிப்படையாக விசாரிக்க வேண்டும்’ என்று அமெரிக்க ஜனாதிபதியின் தலைமை மருத்துவ ஆலோசகரான டாக்டர் அன்டனி ஃபாசி சில தினங்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த உத்தரவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் பரவியுள்ளது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தொடர்ந்து கூறிவந்தன. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் 10 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு பிப்ரவரி மாதம் சீனாவுக்குச் சென்றது.

இதன் முடிவில் கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில்தான் உருவானது என்பதற்கான ஆதாரம் இல்லை என்று கூறியிருந்தது. இந்த நிலையில் அன்டனி ஃபாசி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

                               

இந்த சர்ச்சை தற்போது எழுந்ததற்கு என்ன காரணம்?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  தமது நாட்டின் உளவு அமைப்புகளிடம் கொரோனா வைரஸின் மூலத்தை 90 நாட்களுக்குள் கண்டறிந்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘இந்த விஷயத்தில் உங்களுடைய முயற்சிகளை இரட்டிப்பாக்கி பணியாற்றுங்கள்’ என்று அவர் உளவு அமைப்புகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

‘வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதா அல்லது இது ஆய்வக விபத்தா’ என அனைத்தையும் சேர்த்து கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த அறிக்கையை தான் பதவியேற்றபின் கோரியதாகவும் அது தனக்கு கிடைத்துள்ளதாகவும் பைடன் புதன்கிழமையன்று வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் தற்போது இது குறித்து மேலும் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று பைடன் வெளியிட்ட அறிக்கையில் ‘இன்றைய நிலவரப்படி இரு சாத்தியமான வைரஸ் மூலம் குறித்து அமெரிக்க உளவு சமூகம் தமது கருத்துகளை வழங்கியிருந்தாலும் தீர்க்கமான முடிவை அவை எட்டவில்லை’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான் உளவு அமைப்புகளிடம் தங்களுடைய வைரஸ் மூலத்தை கண்டறியும் முயற்சியை இரட்டிப்பாக்குமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் உளவு அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டின் நாடாளுமன்றத்திடம் அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் ஜோ பைடன் அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கூட்டாளி நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றும் என்றும் இதில் முழுமையாகவும் வெளிப்படையாகவும் தரவுகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் சர்வதேச புலனாய்வுக்கும் சீனா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் ‘Covid-19 மூலம் தொடர்பாக நாடாளுமன்ற குழுக்களின் விசாரணைகளின்போது எழும் கேள்விகளால் எழுந்த நெருக்கடியிலேயேஅந்த கேள்விகளுக்கான பதில் அளிக்கும் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதை உலக சுகாதார அமைப்பின் பொறுப்புக்கு ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் மாற்றியிருக்கிறது’ என்று கட்டுரை ஒன்றில் கூறியுள்ளது.

மேலும் சிஎன்என் செய்தித் தொலைக்காட்சி செய்தியில் வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்திருக்கலாம் என்பதை விசாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்ட அமெரிக்க உளவு அமைப்பின் பிரிவை தேவையற்ற நிதிச்சுமை நடவடிக்கை எனக்கூறி ஜனாதிபதி நிர்வாகம் மூடி விட்டது என்று கூறப்பட்டது. இந்தப்பின்னணியிலும் ஜனாதிபதி ஜோ பைடனின் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீனா கடும் கண்டனம்

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்திலிருந்து உருவானதா என்பதை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது அரசியல் ரீதியாக திரித்து கூறப்படுவதாகவும் சீனா மீது பழிபோடும் செயல் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

சீனாவின் வூஹான் மாநிலத்திலுள்ள வைரஸ் தொடர்பான ஆய்வகத்திற்கும் கொரோனா வைரஸிற்கும் எந்த தொடர்பும் இல்லை என சீனா தெரிவித்துள்ளது.

கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் சீனாவின் வூஹானில் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இதுநாள் வரை உலக அளவில் 17.1 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 3,556,724 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் வூஹானில் உள்ள கடல்சார் உயிரின உணவுச் சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக தொடர்புபடுத்திய ஆய்வாளர்கள், அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்தே முதன் முதலாக மனிதர்களுக்கு பரவியதாக கருதினர்.

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸின் மூலம் குறித்து ஆய்வு செய்வதற்கு சீனா சென்றிருந்த உலக சுகாதார நிறுவனத்தின் குழு ஆய்வக கசிவிலிருந்து வைரஸ் பரவியிருக்க எந்த வாய்ப்பும் இல்லை என தெரிவித்திருந்தது.

சீனாவிற்கு சென்றவர்களில் ஒருவரான உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் மரியம் கூப்மேன்ஸ், அமெரிக்க அதிகாரிகளுக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிபிசியிடம் தெரிவித்தார்.

வூஹானின் ஆய்வகத்தில் தற்செயலாக வைரஸ் கசிந்ததைக் காட்டிலும் அது அங்கிருந்து உருவானதற்கான ஆதாரங்கள் வலுவடைந்து வருவதாக அமெரிக்க ஊடகங்களின் சமீபத்திய செய்திகள் தெரிவித்திருந்தன.

ஆனால், அந்த செய்திகளில் இடம்பெற்ற தகவல்களை கண்டித்திருந்த சீனா, அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தது.