பயணக்கட்டுப்பாடுக்குள் நாமல் எப்படி யாழ். வந்தார்? – சுமந்திரன் கேள்வி

0
277
Article Top Ad

இலங்கை முழுவதும் பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் வேளையில், அமைச்சர் நாமல் ராஜபக்‌சவுக்கு மாத்திரம் எவ்வாறு பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது? எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சரான நாமலுக்கும் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? என்றும் சுமந்திரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் எவருக்குமே வீதிகளில் செல்ல முடியாது எனக் கூறப்படுகின்ற வேளையில் அமைச்சர் நாமல் ராஜபக்‌சவுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் இல்லையா என்பதை அரசிடம் கேட்கின்றேன்.

நாளாந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருக்கையில் நாமல் ராஜபக்ச மாத்திரம் நடமாடுவது அனுமதிக்கப்படக்கூடியதா? விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற காரணி குறித்து எந்தவித அறிவிப்பும் எமக்குக் கிடைக்கவில்லை.

உண்மையில் இப்போதுள்ள நாட்டின் நிலைமையில் வாகனங்கள் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமா என்ற கேள்வி எங்கள் மத்தியில் உள்ளது.

மக்களுக்கான கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்கவே முடியாத நிலையில், வாகனம் கொள்வனவு எதற்கு? சாதாரண சூழலில் இவற்றைச் செய்வதில் எங்கள் மத்தியில் எதிர்ப்பில்லை. ஆனால், இப்போது அவசியமில்லை” – என்றார்.