500 மீற்றர்கள் மட்டுமே X-Press Pearl கப்பலை நகர்த்த முடிந்ததா?

0
331
Article Top Ad

பல நாட்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில் X-Press Pearl கப்பலை ஆழ்கடலை நோக்கி நகர்ந்த முனைந்த போது மூழ்கத்தொடங்கியதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்தன.

உண்மையில் கப்பல் எரிந்துகொண்டிருந்த இடத்தில் இருந்து எவ்வளவு தூரம் ஆழ்கடலை நோக்கிய பாதையில் நகர்த்த முடிந்தது என அறிவதற்கு ஆர்வம் கொண்டு பல்வேறு தரப்பினரிடமும் வினவியபோது பலரிடம் தகவல் இருக்கவில்லை.

ஆனால் இலங்கையிலுள்ள சர்வதேச செய்திநிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்  தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 500 மீற்றர்கள் மாத்திரமே கப்பல் முன்னர்த்தப்பட்டதாகவும் அதற்குள்ளாக கப்பல் தரைதட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது கப்பலின் நிலைமை என்ன?

இதேவேளை இன்று காலை எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் உரிமையாளர்களான X Press Feeders எக்பிரஸ் பீடர்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையின் படி நேற்றையதினம் பிந்திய வேளையில் இருந்தமாதிரியே தான் கப்பலின் நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

இன்று காலை இலங்கை நேரப்படி 7 மணிக்கு மேற்கொண்ட அவதானிப்பின் பிரகாரம் கப்பலில் இருந்து எவ்வித சேதமுற்ற பொருட்களோ வெளியே செல்லுவதற்கான அன்றேல் கப்பலிலிருந்து எண்ணெய்க்கசிவு இடம்பெறுவதற்கான எவ்வித சமிக்ஞைகளும் தென்படவில்லை என அந்நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது கப்பலின் பின்பக்கத்தின் அடிப்பாகம் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 21 மீற்றர் ஆழத்தில் தரை தட்டியுள்ளது. முன்பக்கத்தின் முகப்புபகுதி இன்னமும் வெளித்தெரிந்தவண்ணமுள்ளது.

கப்பல் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாகவும் இவர்கள் கப்பலில் இருந்து சேதமுற்ற பொருட்கள் வெளியேறுமிடத்து அதனைக் கையாள்வதற்காக இலங்கை கடற்படையின் துணையுடன் இருப்பதாகவும் அவர்களுடன் இந்திய கடலோர காவற்படையினரும் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலில் இருந்து எண்ணெய்க்கசிவு இடம்பெற்றால் அதனைக் கையாளக்கூடிய தொழில்நுட்பவளத்தை இந்தியக் கரையோரக் காவற்படையினர் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்த பொருட்களுக்கு என்ன ஆனது?

கப்பல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட மதிப்பீடுகளிற்கமைவாக கப்பலில் இருந்த பொருட்களில் அனேகமானவை தீயில் சாம்பலாகிவிட்டதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

கப்பல் சிப்பந்திகளின் நிலைமை என்ன?

கப்பலின் சிப்பந்திகளில் பலரும் ஒதுக்கப்பட்ட ஹோட்டல்களில் தொடர்ந்து  கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளனர்.

இதேவேளை தெரிவுசெய்யப்பட்ட சிப்பந்திகள் தீ அனர்த்தம் கப்பலில் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பான பொலிஸாரின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவருவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் விசேட சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்ட கப்பல் சிப்பந்திக்கு இன்னமும் கொரோனாவிற்குரிய குணங்குறிகள் தென்படவில்லை எனச்சு ட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கப்பலில் இருந்து வெளியேறி பிளாஸ்டிக் துணிக்கைகளின் கதி?

கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்களில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் துணிக்கைகள் எந்தத் திசையில் நகர்ந்துசெல்லும் என மேற்கு அவுஸ்திரேலியாவின் சமுத்திர நிறுவகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களான சரித பட்டியாராச்சி மற்றும் கலாநிதி சரத் விஜேரத்ன ஆகியோர் எதிர்வுகூறல் அனிமேஷன் ஒன்றைத் தயாரித்துள்ளனர். இதன்படி பிளாஸ்டிக் துணிக்கைகள் இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் இருந்து வங்களா விரிகுடா வரையில் வியாபிக்கும் என்ற வரைபடத்தில் விளக்கியுள்ளனர்.

 

இந்தக் கப்பல் அனர்த்தம் தொடர்பாக நேற்றைய தினம் ஒளிப்பதிவுசெய்யப்பட்ட காணொளி இதோ