ஊடகவெளியை ஆக்கிரமிக்கும் இந்த பியூமி ஹன்ஸமாலி யார்? (தலைப்பைத் தாண்டி வாசிக்கவும் )

நிகழ்ச்சி நிரல் கோட்பாட்டிற்கமைய தொடர்ச்சியாக அதிகப்படியான ஊடக அவதானிப்பைக் கொடுத்துக்கொண்டிருப்பின் சில விடயங்கள்,சில பிரச்சனைகள் மற்றும் சில மனிதர்கள் தொடர்பான முக்கியத்துவமானது அதிகரிக்கும்.

0
629
Article Top Ad
பியூமி ஹன்ஸமாலி

எனது நீண்டகால நண்பி தற்போது ஒரு மருத்துவராக இருக்கின்றார். சில நாட்களுக்கு முன்னர் யார் இந்த பியூமி ? என என்னிடம் வினவியபோது ஏதோ நக்கல் அடிக்கின்றார் என முதலில் நினைத்துக்கொண்டேன். பின்னர் தான் ஊடகங்களில் இருப்பவர்கள் தெரிந்துவைத்திருக்கின்றார்கள் என்பதற்காக ஏனைய துறைகளில் பணியாற்றுகின்றவர்கள் அவரைப் பற்றி அறியாமல் இருப்பது ஆச்சரியமில்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.

அறிந்துகொள்ளும் அளவிற்கு ஆக்கபூர்வமான பணியெதனையும் பியூமி செய்யவில்லை என்பது உண்மையாக இருப்பினும் இலங்கையிலுள்ள மக்களை வாட்டிவதைத்து எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்திக்கொண்டிருக்கும் பல முக்கிய பிரச்சனைகளைத் திசை திருப்புவதற்கு பயன்படுத்தப்படும் ஒருவராக பியூமி இருக்கின்றார் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. சமூக வலைத்தளத்தில் உலா வரும் போது பியூமியின் படங்களைப் பார்த்துள்ளபோதும் அவரைப் பற்றி அதிகமாக அறிந்திருக்கவில்லை.

கொரோனா விதிமுறைகளை மீறி கடந்த மே 30ம்திகதி ஷங்கரீலா ஹோட்டலில் பிறந்தநாள் விருந்துபசாரத்தில் பியூமி ( இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சந்திமல் ஜயசிங்கவுடன் இணைந்து இவரும் ஏற்பாடுசெய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன)  பங்கேற்றிருந்தார்.

இந்த விவகாரம் ஊடகங்களில் பூதாகரமாகியதையடுத்து இவ்விருவர் உட்பட 15 பேர்  கைதுசெய்யப்பட்டனர்.  தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்பட்டபோது பியூமி வாகனத்தில் இருந்தபடி பேஸ்புக் லைவ் வீடியோ , அதன்பின்னர் இலங்கையின் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பியூமியின் தொலைபேசி அழைப்பிற்கு செவிசாய்த்து அவரது உடைகளை தனிமைப்படுத்தல் இடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதித்தமையை அடுத்து ஏற்பட்ட விமர்சனங்கள் என கடந்த ஒருவாரத்திற்கு மேலாக பியூமியை இலங்கையின் வெகுஜன மற்றும் சமூக ஊடகப்பரப்பில் பேசுபொருளாக வைத்துள்ளன.

 

இந்த நிலையில்தான் பியூமியைப் பற்றி சற்றே தேடி இந்தத்தகவல்களைப் பெற்றுக்கொண்டேன்.

பியூமியின் குடும்பப்பின்னணி

1992ம் ஆண்டு நவம்பர் 22ம் திகதி பிறந்த பியூமி ஹன்ஸமாலிக்கு  28 வயதாகிறது . www.wikitia.com என்ற இணையத்தளத்திற்கமைவாக இவரது தந்தை நிஹால் லக்ஸ்மன் கோமஸ் எனவும் தாய் வசந்தி பெரேரா எனவும் குறிப்பிடப்படுகின்றது. குடும்பத்தில் ஒரே பிள்ளையான பியூமி ,ராஜகிரியவிலுள்ள ஸ்ரீ சோபித வித்தியாலயத்தில் பாடசாலைககல்வியைப் பூர்த்திசெய்துள்ளார்.

By special arrangement

இவர் சிறுவயது முதல் பல ஆண்டுகளாக வசித்த இல்லம் ராஜகிரிய ஒபயசேகரபுர பகுதியில் இருந்து கொலன்னாவைக்கு செல்லும் வீதியில் அமைந்துள்ளதாக அந்தப்பகுதியில் வசிக்கும் எனது ஊடக நண்பன் இந்தப்புகைப்படத்தைப் பிடித்து அனுப்பியிருந்தான். அவர் தற்போது அங்கு வசிப்பதில்லை.

பியூமி ஹன்ஸமாலி ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்துவாழ்பவர் என்பதுடன் அவருக்கு கவிங்க என்ற மகன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மொடலிங் வாழ்க்கை

இலங்கையின் பிரபல முன்னாள் மொடல் அழகியான ரொஷேன் டயஸின் என்ற மொடலிங் நிறுவனத்தில் பயிற்சிக்காக 2011ல் இணைந்து கொள்கிறார் பியூமி. தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல மொடலிங் அழகு ராணிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளதாக இணையத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன. 2015ம் ஆண்டில்தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற Mrs.Globe போட்டியில் பங்கெடுத்த பியூமி 2016ம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற  Mrs. Noble Queen போட்டியில் பங்கேற்றுள்ளார்.   2017ல் துருக்கியில் நடைபெற்ற  Best Model in Asia in Future Fashion Faces World போட்டியில் பங்கேற்றுள்ளதாக www.celebzbiography.com என்ற இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2014ல் முதன் முறையாக ஐடிஎன் தொலைக்காட்சியினுடாக சின்னத்திரையில் கன்னிப்பிரவேசத்தை மேற்கொண்ட பியூமி 2018 ல் முதன் முறையாக ‘வஸ்ஸானய சந்த ‘என்ற திரைப்படத்தினூடாக சிங்கள சினிமாவில் அறிமுகத்தை மேற்கொண்டார்.

அதே ஆண்டில் ‘ரைகமயாய் கம்பலயாய்’ என்ற சிங்களத்திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது லக்னோவ் என்ற மலையாள மொழிப்படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் பியூமி.

1992ம் ஆண்டில் யஸோதா விமலதர்ம என்ற நடிகை ஆச்சர்யர்ன் என்ற மலையாளப்படத்தில் நடித்த பின்னர் இலங்கையில் இருந்து இந்தியப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் சிங்கள நடிகையாக பியூமி குறிப்பிடப்படுகின்றார்.

இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா மரிய நேசனும் Friendship என்ற தென்னிந்தியத்திரைப்படத்தில் நடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

பியூமியின் சமூக வலைத்தள ஆதிக்கம்

இதுவரை அவரது சினிமா வாழ்க்கையோ சின்னத்திரை வாழ்க்கையோ பெரிய வெற்றிகளைக் காணாத போதும் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டகிராமில் அவரது ஆதிக்கம் அதிகமாகவுள்ளது. 16லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அவரது இன்ஸ்டகிராமை பின்தொடர்கின்றவர்களாக இருக்கின்றனர் என்கின்றபோது எதற்காக என்று சிந்திக்கிக்க வைக்கின்றதல்லவா. ஃபேஸ்புக்கிலும் அவரது பிரசன்னம் இருக்கின்றபோதும் இன்ஸ்டகிராம் அளவிற்கு இல்லை. ஃபேஸ்புக்கில் 4 லட்சம் பேருக்கும் அதிகமானோர் அவரைப் பின்தொடர்கின்றனர்.

இதனைத்தவிர பியூமியை டுவிட்டரில் 123ஆயிரம் பேர் பின்தொடருகின்றனர். விளையாட்டு வீரர்கள் ,நடிகர்கள் ,அரசியல் பிரமுகர்கள் போன்றோருக்கு சமூக வலைத்தளங்களில் அதிகமான ரசிகர்கள் இருப்பது பொதுவானது. ஆனால் பியூமி எவ்வாறு இந்தளவிற்கு ரசிகர்களைப் பெற்றார் என அறிவதற்காக சமூக ஊடக பயிற்றுவிப்பாளர் பிரசாத் பெரேராவிடம் வினவினேன்.       ‘ பல காரணங்கள் இருப்பினும் தனது அங்கத்தை சமூகத்தில் காணப்படும் விதிக்கப்படாத எல்லையை மீறியதாக காண்பிக்கும் வகையிலான புகைப்படங்களை பதிவேற்றம் செய்கின்றமையே இந்தளவிற்கு சமூக ஊடகத்தில் அவரது பிரசன்னம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும்.’எனத் தெரிவித்தார்.

கடந்த ஜுன் 2ம் திகதி பியூமி தனது பேஸ்புக்கிலிருந்து நேரலையில் பேசியவேளை ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் பியூமியின் நேரலையை 6500 பேர் பார்த்துக்கொண்டிருந்த வேளை டில்வின் சில்வாவின் நேரலையை 470 பேர் மாத்திரமே பார்த்துக்கொண்டிருந்தனர். இது சமூக வலைத்தளத்தில் அவர் செலுத்தும் ஆதிக்கத்திற்கு ஒரு சான்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பியூமிக்கு சமூக வலைத்தளத்தில் இருக்கின்ற செல்வாக்கை சாதுரியமான முறையில் தமக்கு வேண்டிய நேரத்தில் பயன்படுத்துகின்ற தரப்பினர் பயன்படுத்தியிருக்கின்றனர் .

 

நிகழ்ச்சி நிரல் கோட்பாடு

 

ஊடகவியலில் முதுமானி படிப்பை மேற்கொள்பவர்கள் நிகழ்ச்சி நிரல் கோட்பாடு பற்றி படிப்பதுண்டு. இதனை சாதாரண மக்களுக்கு புரியும் படி கூறுவதெனில் எம்மைச் சுற்றி நடக்கின்ற எண்ணற்ற சம்பவங்களில் எதனைப் பெரிதுபடுத்திக் காண்பிப்பதற்கு முன்னுரிமையளிக்கவேண்டும் என்பதை ஊடக நிறுவனங்களின் தலைவர்களே தீர்மானிக்கின்றனர்.

ஊடக நிறுவனங்களை நடத்துகின்றவர்களுக்கு நெருக்கமான அரசியல் வாதிகள், வியாபார நிறுவனங்கள் ,மனிதர்கள் பற்றி நல்ல விதமாக வருகின்ற தகவல்களை பெரிதாக காண்பிக்கும் அதேவேளை அவர்களைப் பற்றி மோசமாக வருகின்ற தகவல்களை இருட்டடிப்புச் செய்வதற்கு அன்றேல் அதனை சிறிய விடயமாகக் காண்பிப்பதற்கும் முயல்வதுண்டு.

நடந்த உண்மையை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மாற்றியமைத்து மக்களுக்கு உண்மைத்தன்மைய திரிவுபடுத்திக் காண்பிப்பது அன்றேல் அதன் முக்கியத்துவத்தைக் குறைத்துக் காண்பிப்பது போன்ற விடயங்களில் ஊடகங்கள் முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றன.

கடந்த ஜுன் 2ம் திகதி நிகழ்ச்சி நிரல் கோட்பாட்டைப் பற்றி விளங்கிக்கொள்ளவிரும்புகின்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக அமைந்திருக்கின்றது. அன்றையதினத்தில் தான் தீங்குவிளைவிக்கக்கூடிய இரசாயனப்பதார்த்தங்களைத் தாங்கிவந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கியது.

இலங்கையின் வரலாற்றிலேயே மிக மோசமான செயற்கைக் கடல் அனர்த்தமாக இது அமைந்த நிலையில் சர்வதேச ஊடகங்கள் பலவும் உள்நாட்டு ஊடகங்கள் சிலவும் இதுபற்றிய செய்திகளை அறிக்கையிட்டுக்கொண்டிருந்தன.

ஆனால் உள்நாட்டில் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள தொலைக்காட்சி ஊடகங்கள பியூமியும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பிவைக்கப்படுகையில் ஃபேஸ்புக் நேரலையில் பியூமி பேசியதை திரும்பத்திரும்ப ஒளிப்பிக் கொண்டிருந்தன.

கீழ் காண்பிக்கப்பட்டுள்ள கூகுள் ட்ரெண்ட்ஸ் அட்டவணைப்படி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் எரிந்து மூழ்கிய செய்தியை விடவும் பியூமி பற்றிய செய்தியே இலங்கையில் அதிகமாக ட்ரண்ட் ஆகியிருந்தமையை உறுதிப்படுத்துகின்றது.

ஒருபுறம் கொரோனாவின் மூன்றாம் அலை இலங்கை தொடர்ந்தும் அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றது. நாட்டில் கொரோனாவால் தினமும் 3000 பேர் வரையில் கொரோனா தொற்றுக்குள்ளாவதாகவும் 50 பேர் வரையில் இறந்துகொண்டிருப்பதாகவும் உத்தியோகபூர்வ தகவல்கள் வருகின்றன.( உண்மை  எண்ணிக்கையோ இதனைவிட அதிகமாக உள்ளதென்கிறது ஊர்க்குருவி)

மறுபுறம் சீரற்ற காலநிலை மக்களை வாட்டி வதைத்து ஆயிரக்கணக்கானவர்களை இடம்பெயர் வைத்தும் பெறுமதியான உயிர்களைப் பறித்தும் பரிதவிக்க வைத்துக்கொண்டிருக்கின்றது.

இன்னொருபுறம் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தால் பாரிய சுற்றாடல் பிரச்சனை ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தொழில்களை முன்னெடுக்க முடியாது தவித்துக்கொண்டும் கடற்பகுதியினதும் வாழ்வாதாரத்தினதும் எதிர்காலம் குறித்த அச்சங்களாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் வெலிகம .மட்டக்களப்பு மற்றும் பாணந்துறையில் இடம்பெற்ற படுகொலைகள் மனங்களைப் பதறவைத்து மனித உரிமைகளைக் கேள்விக்குட்படுத்திக்கொண்டிருக்கின்றன.

நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் கடனில் மூழ்கி கணிசமான மக்களின் கழுத்தை இறுக்கிவருவதை எகிறிவரும் பொருட்களின் விலை அதிகரிப்பு உணர்த்திக்கொண்டிருக்கின்றது. இப்படி இன்னமும் பல பிரச்சனைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம் .

இந்தப்பிரச்சனைகளுக்கு நடுவே இன்று ஊடகங்களை ஆக்கிரமித்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இந்த பியூமி ஹன்ஸமாலி பயன்படுகின்றார் அன்றேல் பயன்படுத்தப்படுகின்றார் என்பதில் சந்தேகமில்லை.

ஆக்கம் : அருண் ஆரோக்கியநாதர்

 

நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் பற்றி விரிவாக பார்க்க