எக்பிரஸ் பேர்ள் கப்பலை அண்டிய கடற்பரப்பில் பெரியளவில் எண்ணெய்க்கசிவை புலப்படுத்தும் செய்மதிப்படங்கள்

0
393
Article Top Ad
Source : https://news.sky.com/

எக்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் இடம்பெற்ற கடற்பரப்பில் பெரியளவில் எண்ணெய்க்கசிவை புலப்படுத்தும் செய்மதிப்படங்களை www.news.sky.com இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

திங்களன்று ( 7.6.2021) எடுக்கப்பட்ட செய்மதிப்படங்களில் எண்ணெய்க்கசிவிற்கான சான்றுகள் தெளிவாகக் காணப்படுவதாக அந்த இணையத்தளம் மேலும் செய்திவெளியிட்டுள்ளதுடன் இதனால் சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய அச்சங்கள் குறித்தும் அச்சம் வெளியிட்டுள்ளது.

Source ww.news.sky.com/

கடந்த பலநாட்களாக கப்பல் அனர்த்தம் இடம்பெற்றபகுதியில் எண்ணெய்க்கசிவு தொடர்பாக மேற்கொள்ள முயன்ற சீரற்ற காலநிலையாலும் கொந்தளிப்பான கடற்சூழ்நிலையாலும் தாமதிக்கப்பட்ட நிலையிலேயே எண்ணெய்க்கசிவு தொடர்பான சான்றுகள் செய்மதிப்படங்கள் மூலம் வெளியாகியுள்ளதாக மேலும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தக் கப்பலில் 325 மெட்றிக் தொன் மசகு எண்ணெய் இருப்பதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் கடந்த ஜுன் 6ம் திகதி தேசிய நீரியல்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை அமைப்பின் பிரதம விஞ்ஞானி கலாநிதி கணபதிப்பிள்ளை அருளானந்தனுடன் நடத்திய மெய்நிகர் நேர்காணலின் போது எண்ணைக் கசிவு தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தேன்.

அதன்போது இது பற்றி இன்னமும் ஆராய்ந்துவருவதாகவும் கப்பலில் இருந்த எண்ணெய்யின் பெரும்பகுதி எரிந்து ஆவியாகியிருக்க வாய்ப்புண்டு எனவும் கூறிப்பிட்டார். எனினும் நாரா நிறுவனம் எண்ணெய்கசிவு ஏற்படுமானால் அதனை எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.

 

எண்ணெய்க் கசிவு அச்சத்தைத் தவிர கப்பலுக்குள் இருந்த 23 தொன்கள் நைட்ரிக் அமிலம் உட்பட 40ற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் கடலில் கலந்திருந்தால் அவை ஒன்றோடொன்று சேர்ந்து கடல் வாழ்உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் கருத்தில் கொண்டு அனர்த்தம் இடம்பெற்றபகுதியைச் சூழவுள்ள 50 கிலோமீற்றர் பகுதிகளில் மீன்பிடிக்கத்தடைசெய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இலங்கையின் வரலாற்றில் கடற்பரப்பில் இடம்பெற்ற மிக மோசமான சுற்றாடல் அனர்த்தமாக எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம் பார்க்கப்படுகின்றது.

தீங்குவிளைவிக்கக்கூடிய இரசாயனங்களுடன் பிளாஸ்டிக் பெலட்ஸ் எனப்படும் பிளாஸ்டின் சிறுதுணிக்கைகளும் பெருமளவில் கப்பலில் இருந்து கடலுக்குள் கொட்டியதால் ஏற்கனவே நாட்டின் மேற்குப்பகுதிமுதற்கொண்டு தென்பகுதிவரையான கடற்கரைப்பகுதியில் பலபாகங்கள் இந்தப் பிளாஸ்டிக் துணிக்கைகளால் நிறைந்துள்ளன.

இவற்றை அகற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் இறந்த நிலையில் பல ஆமைகள் மீன்கள் டொல்பின் ஏற்கனவே கரை ஒதுங்கியுள்ளன. இதுதொடர்பாகவும் நாரா அமைப்பின் பிரதம விஞ்ஞானியுடனான நேர்காணலில் வினவியிருந்தேன்.

நாரா அமைப்பின் பிரதம விஞ்ஞானியுடனான நேர்காணலை முழுமையாகப் பார்க்க

 

கடந்த மேமாதம் 19ம்திகதி இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்த எக்ஸ்பிரஸ் பேர் கப்பல் 20ம்திகதி முதல் பல நாட்களாக எரிந்து ஜுன் 2ம் திகதியன்று நீர்கொழும்பிற்கு 4.5 கடல்மைல் பகுதியில் மூழ்கியிருந்தது.