X-Press Pearl நச்சுக் கப்பல்: சூழல் பேரழிவின் பெறுமதி என்ன?

0
269
Article Top Ad

“இலங்கைக் கடலில் எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் ஏற்படுத்திய சேதங்களுக்குப் பெருந்தொகையிலான நட்டஈடு கோரப்படும். பொருளாதார நெருக்கடி நிலவும் இச்சந்தர்ப்பத்தில் இது இலங்கைக்கு அவசியமானதாகும்.”

இலங்கைக் கடலில் தீப்பற்றி எரிந்து மூழ்கிப்போன எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் ஏற்படுத்திய மாசு பற்றிய அரசியல் புலணுணர்வே இது.

அரசியல்வாதிகள் மாத்திரமல்ல பெரும்பான்மையான மக்களுக்கும் அழிவேற்படுத்திய மாசாக்கத்திற்கான நட்டஈடு எவ்வாறு வழங்கப்படுகின்றது என்பது பற்றித் தெரியாது.

சமுத்திரங்களில் பொலித்தீனையும் பிளாஸ்டிக்கினையும் கொட்டுவதற்கென அடையாளம் காணப்பட்ட 20 நாடுகளுக்கான உலகளாவிய சுட்டியில் ஐந்தாவது நாடாக இருக்கும் இலங்கை, கடல்சார் சூழலின் நீடுறுதியான முகாமைத்துவத்திற்காக நட்டஈட்டினைக் கோரி அதனைப் பயன்படுத்தவேண்டும்.

நைத்திரிக் அமிலக் கசிவால் கொழும்புக்கு அருகில் உள்ள கடலில் தீப்பற்றிய சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு என்ன நடந்தது?

தீயைக் கட்டுப்படுத்த இலங்கையும் இந்தியாவும் எடுத்த முயற்சிகளைத் தாண்டி பல கொள்கலன்கள் கடலினுள் சரிந்து வீழ்ந்துவிட்டன.

எரிந்த கொள்கலன்களின் எச்சங்களும் பிளாஸ்திக் மூலப்பொருட்களும் நீர்கொழும்பில் கரையொதுங்கிய அதேவேளை உருவில் மிகச் சிறியதும் தீங்குமிக்கதும் குறைந்த அடர்த்தி கொண்டதுமான பிளாஸ்திக் உருளைகள் இறந்த மீன்களின் உடலில் காணப்பட்டன.

இதுவரை எண்ணெய்க் கசிவு ஏற்படவில்லை என்ற போதிலும் எரிந்த பிளாஸ்திக்கினால் கப்பலைச் சுற்றி எண்ணெய்ப் பிசுக் கறை உருவாகியுள்ளது.

கப்பலைச் சுற்றி எண்ணெய்க் கசிவு காணப்படுவதாக புலப்படுத்தும் செய்மதிப்படம் இன்று ( 10.06.2021) ஊடகங்களில் வெளியாகியுள்ளன .

கடல் கலங்களினால் உருவாக்கப்படும் மாசாக்கம் தொடர்பில் முற்கூட்டியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக அரசுகள் கொண்டுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய ஏராளமான விபரங்களைக் கடல் சமவாயச் சட்டம் கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மாசாக்கம் இடம்பெறும் கடல்சார் வலயத்தில் தங்கியுள்ளன. கடல்சார் அழிவினால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அழிவுகளுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்ட நட்டஈடு பற்றியும் அறிந்துகொள்ளும் உரிமையினைப் பொதுமக்கள் கொண்டுள்ளனர்.

கடற் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினைச் (Marine Environmental Protection Authority) சேர்ந்த அதிகாரிகள் தாங்கள் இன்னும் சேத மதிப்பீட்டினை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.

சுற்றாடலுக்கு ஏற்பட்ட சேதத்தினையும் கடற்றொழிலுக்கு ஏற்பட்ட சேதத்தினையும் சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்ட சேதத்தினையும் நட்டஈடு உள்ளடக்கவேண்டும்.

முன்பிருந்த நிலைமைக்குச் சுற்றாடலைக் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்படவுள்ள நியாயமான செலவுகளைச் சுற்றாடல் அழிவுக்கான நட்டஈடு கொண்டிருக்கவேண்டும்.

இவ்வாறான மீளுருவாக்கும் நடவடிக்கைகள் சுற்றாடல் சேதத்தின் இயற்கையான மீளலைத் துரிதப்படுத்துகின்றன என்பதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எவ்வாறாயினும், கடல்சார் சூழல் முகாமைத்துவத்தில் ஆய்வு இடைவெளிகள் காணப்படுகின்றன.

கரையோர மற்றும் கடல்சார் சூழலியல் முறைமைப் பெறுமானங்கள், சூழலியல் முறைமையின் தரம் மற்றும் அளவு சார்ந்த தகவல்கள் தொடர்பான அடிப்படைத் தரவுகள் இலங்கையில் மிகவும் வரையறுக்கப்பட்டவையாகவே உள்ளன.

கடல்சார் விபத்துக்களினால் ஏற்படுத்தப்பட்ட சேத மதிப்பீட்டுச் செயன்முறையினை இது தாமதப்படுத்துவதுடன் சுற்றாடல் மீளுருவாக்க நடவடிக்கைகளையும் தவிர்க்க முடியாது தாமதப்படுத்துகின்றது.

கடல் சமவாயச் சட்டத்தின் அதிகார வரம்பின் கீழ் கடல்சார் சூழல் சேதத்திற்கான பொதுவான கோரிக்கைகள் அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, பொருளாதாரம் சாராத தன்மையுடைய கோரிக்கைகளுக்கு நட்டஈடு வழங்கப்படமாட்டாது.

எதிர்கால சந்ததியினர் பாதிப்பற்ற சூழலியல் முறைமைகளின் நன்மைகளை அனுபவிக்கக்கூடியவர்களாக இருக்க மாட்டார்கள்.

ஏனெனில், எவ்வளவு பாரிய மீளுருவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் இச்சூழலியல் முறைமைகள் எவையும் முன்பிருந்த அதே சூழலியல் முறைமையாக இருக்கமாட்டாது.

எனவே, எதிர்காலச் சந்ததியினருக்கு ஏற்படப் போகும் விளைவுகளை நட்டஈட்டின் கீழ் பூரணமாகவும் துல்லியமாகவும் உள்வாங்க முடியாது.

எவ்வாறாயினும், வருநிகழ்வுப் பெறுமதி கணித்தல் முறைகள் போன்ற முறைகளின் மூலம் இந்த எதிர்காலப் பெறுமதிகளைப் பொருளாதார ரீதியாகக் கணக்கிட முடியும்.

சேதமாக்கப்பட்ட சூழலியல் முறைமைகளின் பெறுமதிகளுக்காக மாத்திரமன்றி எதிர்காலப் பெறுமதிகளுக்காகவும் கடல்சார் வளங்கள் மதிப்பிடப்பட வேண்டும்.

ஒரே ஒரு செயற்படும் பாதுகாக்கப்பட்ட கடல் பிரதேசமான திருகோணமலையிலுள்ள புறாத் தீவு போன்ற இடங்களுக்கு மட்டுமே கடல்சார் சூழியல் முறைமைகளின் பெறுமதி கணித்தல் வரையறுக்கப்பட்டுள்ளது.

விடுக்கப்படும் கோரிக்கைகள் கடல்சார் சூழலியல் முறைமைகளுக்கும் கரையோரச் சூழலியல் முறைமைகளுக்கும் ஏற்பட்ட சேதத்திற்கு நட்டஈடு வழங்குவதற்குப் போதியதாக இருக்கும் சாத்தியம் இல்லை.

எனவே, சமுத்திரங்களில் கடல் கலங்களினால் ஏற்படுத்தப்படும் மாசாக்கத்தின் காரணமாக எடுக்கப்படும் மீளுருவாக்க நடவடிக்கைகளின் நிலைபேறான தன்மைக் கூறினை உள்வாங்கும் விதத்தில் சர்வதேச சட்டங்கள் திருத்தப்படவேண்டிய சந்தர்ப்பம் இதுவேயாகும்.

இலங்கை போன்ற கரையோர வளர்முக நாடுகளில் கடல் கலங்கள் ஏற்படுத்தும் மாசாக்கல் சம்பவங்கள் சுற்றுலாத் துறையும் கடற்றொழிலும் மொத்தத் தேசிய உற்பத்திற்கு வழங்கும் கணிசமான பங்களிப்புக் காரணமாகப் பொருளாதார ரீதியான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.

தற்போது, இந்த இரண்டு துறைகளுமே கொவிட் பெருந்தொற்றின் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கப்பலின் அருகில் பவளப் பாறைகள் இல்லை. ஆனால், எண்ணெய்க் கசிவு ஏற்பட்டால், அது களப்புக்கள், ஆற்றுக் கழிமுகங்கள் மற்றும் கண்டல் தாவரங்கள் போன்ற சுற்றியுள்ள நுண்மையான சூழியல் முறைமைகளில் பாதிப்பினை ஏற்படுத்தும்.

இந்தச் சூழியல் முறைமைகள் கப்பலில் இருந்து வெளியேறிய இரசாயனப் பொருட்களினால் ஏற்கனவே மாசாக்கப்பட்டுள்ளதுடன் அதனால் கடற்றொழிலும் சுற்றுலாத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளன.

வத்தளை முதல் நீர்கொழும்பு வரையான மீனவர்கள் ஏற்கனவே கொவிட்-19 கட்டுப்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களும் இல்லை. வெளிப்படைத்தன்மையும் வகைப்பொறுப்பும் இல்லாத காரணத்தினால் இவர்களினால் அரசாங்கத்தின் நட்டஈட்டு நிகழ்ச்சித்திட்டங்களையும் அணுக முடியாமல் உள்ளனர். பிரதேசத்தில் சுற்றுலாத் துறைக்கும் இதே நிலைமையே ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மத்தியில் சுற்றாடல் பற்றிய அறிவில்லை. சிதிலங்களைச் சேகரிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கைகளைத் தாண்டிக் கரையோர சமுதாயத்தினர் ஆபத்தான பொருட்களைச் சேகரித்து வருகின்றனர்.

ஏனெனில், இவர்கள் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கடல் கலத்தினால் இலங்கைக் கடற்பரப்பில் 2020ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட இரண்டாவது மாசாக்கல் சம்பவம் இதுவாகும் என்ற போதிலும் பின்விளைவுகளைக் கையாளக்கூடிய விதமாக நட்டஈட்டுச் சட்டகம் விரிவானதாகவும் நுட்பமானதாகவும் இல்லை.

ஏனைய நாடுகளில் ஏற்படும் கடல் கல மாசாக்கல் சம்பவங்களில் இருந்து கற்கும் பாடங்கள் நாடுகளுக்கான உள்ளடக்கும் தன்மைமிக்க கடல்சார் பாதுகாப்பு வடிவமைப்புக்களை உருவாக்க உதவியுள்ளன.

இதில் நட்டஈட்டினைக் கோருகையில் சேதங்களின் சகல மூலங்களும் உள்ளடக்கப்பட்டன (சுற்றாடல், கடற்றொழில் மற்றும் சுற்றுலாத்துறை). இவ்வாறான சம்பவங்களின் போது உதவுவதற்குச் சில நாடுகளில் விசேட நிதியங்கள் உள்ளன.

இலங்கை அதிகமான கப்பல்களைக் கவர்வதற்காக அதன் துறைமுக இயலளவை விரிவாக்க இருக்கின்ற காரணத்தினால் கடல் கலங்களினால் ஏற்படுத்தப்படும் மாசாக்கல்களுக்கு ஈடுகொடுப்பதற்கு அதன் நோக்கெல்லையினை விரிவாக்குவதைப் பற்றிப் பரிசீலிக்கவேண்டும்.

பாடசாலைப் பாடவிதானத்தில் இத்தலைப்பினைச் சேர்ப்பதன் மூலம் சுற்றாடல் அறிவினை அதிகரிப்பதும் முக்கியமானதாகும்.

நாடு கடல்சார் விபத்துக்களுக்குத் தன்னைத் தயார்படுத்தவேண்டும். ஏனெனில் இலங்கையின் பிராந்தியக் கடற்பரப்பில் நிகழும் இறுதி நிகழ்வல்ல இது.

ஆக்கம் :அனுராதி டி ஜயசிங்ஹ | Anuradhi D. Jayasinghe

தமிழில் : மாற்றம் https://maatram.org/