அண்மையில் கனடா மற்றும் அமெரிக்காவில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனைகளைத் தெரிவித்திருந்த நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரும் இலங்கை தொடர்பான தீர்மானம் இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக 705 அங்கத்தவர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் பதிவாகிய அதேவேளை 40 பேர் வாக்களிப்பில் பங்கெடுத்திருக்கவில்லை.
ஐநாவின் இலங்கைதொடர்பான அண்மைய அறிக்கையில் விபரிக்கப்பட்டவாறு இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறுகின்றமை கவலைக்குரிய விதத்தில் அதிகரித்துச் செல்வது தொடர்பாக ஆழ்ந்த கரிசனையை இலங்கை குறித்த இந்தத் தீர்மானத்தில் ஐரோப்பிய பாராளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தாம் சந்தேகிக்கின்ற பொதுமக்கள் தொடர்பாக தேடுதல் மேற்கொள்வதற்கும் கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும் பொலிஸாருக்கும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்கும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்திவருவதற்கு ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் தமது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டமானது சித்திரவதை பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் பலவந்த வாக்குமூலம் அளித்தல் ஆகியவற்றுக்கு வழிகோலுவதான தொடர்ச்சியானதும் போதிய ஆதாரங்களைக் கொண்டதுமான முடிவிற்கு வரமுடிந்துள்ளதாகவும் இந்தத்தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.