முன்னெப்போதுமில்லா வகையில் இலங்கையின் பொருளாதாரம் கடும் சவாலை எதிர்கொண்டுள்ளது.
கடந்த வருடம் வரலாறுகாணாத பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்ட இலங்கை நடப்பு வருடத்திலும் பெரும் சரிவைச் சந்திக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2020ல் எதிர்மறையான 3.6% வீழ்ச்சியை சந்தித்தது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, 2019 ஆம் ஆண்டின் இறுதியளவில் இலங்கையிடம் 7.6 பில்லியன் டொலர் கையிருப்பு இருந்ததுடன், கடந்த வருட இறுதியில் அது 5.7 பில்லியன் டொலராக குறைவடைந்தது.
இந்த வருடத்தின் மார்ச் மாத இறுதியில் அந்த இருப்பு 4.1 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
(ஒரு Billion USD பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது கிட்டத்தட்ட 20, 000 கோடி இலங்கை ரூபா என்பதுடன் ஒரு Million USD மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது ஏறத்தாழ 20 கோடி இலங்கை ரூபா ஆகும்)
வெளிநாட்டு கடன் தவணை, பங்குச்சந்தை முதலீடுகள் மீளப்பெறப்பட்டமை காரணமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்நியச்செலாவணியும் இங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு முக்கியமாக அந்நியச்செலாவணி கிடைக்கும் வழிமுறையான சுற்றுலாத்துறை ஊடாக 2019 ஆம் ஆண்டு 3.6 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்தாலும் கடந்த வருடத்தில் 0.7 பில்லியன் டொலர் மாத்திரமே கிடைத்திருந்தது.
இலங்கைப் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையின் நேரடிப் பங்களிப்பு கடந்தாண்டில் 4% மாக இருந்தது ஆனால் மறைமுகப் பங்களிப்பு இதனைவிட அதிகமாகும்.
கடந்த ஆண்டு முதல் ஐந்து மாத காலப்பகுதியுடன் இவ்வாண்டின் அதே காலப்பகுதியை ஒப்பிட்டுப்பார்த்தால் சுற்றுலாப்பயணிகள் வருகை 97% ல் குறைவடைந்துள்ளது.
கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் போக்குவரத்து ஊடாக 2019 ஆம் ஆண்டு 2.3 பில்லியன் டொலர் கிடைத்திருந்தாலும் கடந்த வருடம் அந்த வருமானம் 1.2 பில்லியன் டொலர் வரை குறைவடைந்தது.
2020 ஆம் ஆண்டில் அரசாஙகம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன், நேரடி முதலீடுகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட பரிமாற்ற வசதி ஊடாக மூன்று பில்லியன் டொலர் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், அரச கடன் செலுத்தப்பட்டமை, முதிர்ச்சியடைந்த இறையாண்மை வரிகளுக்கு செலுத்தப்பட்ட நிதி, அரச பிணை முறிகள், பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியமை காரணமாக 4.2 பில்லியன் டொலர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது.
வெளிநாட்டு நிதி சந்தையில் இருந்து கடன் பெறுவதற்கு பதிலாக அரசாங்கம் தற்போது நட்பு நாடுகளிடமிருந்து நாணய பரிமாற்ற வசதிகளை பெற்றுக்கொள்கின்றது.
இதற்கமைய, சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலருக்கு நிகரான சீன நாணயமும், இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலரும் பெறப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலரை அரசாங்கம் வெளிநாட்டுக் கடனுக்காக செலுத்த வேண்டியுள்ளதுடன் அதில் 1.3 பில்லியன் டொலர் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அண்மையில் அறிவித்தது.
இதற்கமைய, இன்னும் 2.4 பில்லியன் டொலரை இந்த வருடம் மத்திய வங்கி செலுத்த வேண்டியுள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார நிலை நிதி சந்தைகள் பற்றிய எதிர்கூறல்கள் கணிப்பீடுகளை வெளியிடுகின்ற Fitch Ratings நிறுவனத்தின் தரவுகளுக்கு அமைவாக இவ்வருடம் முதற்கொண்டு எதிர்வரும் 2026ம் ஆண்டிற்குள்
இலங்கை 29 பில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது கிட்டத்தட்ட 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவை வெளிநாட்டுக்கடன்களைச் திருப்பிச் செலுத்தும் தவணைக்காக கொடுக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது.
வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை இலங்கை திருப்பிச்செலுத்தாவிடின் அது பெரும் கரும்புள்ளியாக அமைந்துவிடும் என சிரேஷ்ட பொருளாதார வல்லுநரும் அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் பிரதம ஆய்வாளருமான கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் தெரிவிக்கின்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரிமைக்காக 780 மில்லியன் டொலர்களையும் இந்திய பரிமாற்ற வசதியின் கீழ் 500 மில்லியன் டொலர்களையும் பங்களாதேஷ் பரிமாற்ற வசதியின் கீழ் 200 மில்லியன் டொலர்களையும் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.