பயணக்கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்தமைக்காக ஏறாவூர் மிச் நகரில் பொதுமக்களை கொழுத்தும் வெய்யிலில் முழங்காலில் வைத்து கைகளை உயர்துமாறு நேற்றையதினம் இராணுவத்தினர் வழங்கிய தண்டனை சமூக ஊடகங்களில் வைரலானது.
இந்தப்புகைப்படங்களை பார்த்ததும் ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பல்வேறு தரப்பினரும் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி விமர்சனங்களையும் பதிவுசெய்திருந்தனர்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தொடர்ச்சியாக வெளிப்படையாகக் குரல்கொடுத்துவருகின்ற முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் காத்திரமான முறையில் தனது டுவிட்டர் தளத்தில் பதிவுசெய்திருந்தார்.
இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தண்டனை இழிவான செயற்பாடு அன்றேல் இழிவான தண்டனை என்றவகையில் அடங்கும். கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இழிநிலையாக நடத்துதலையும் தண்டனைவழங்கலையும் அரசியலமைப்பின் 11வது அத்தியாயம் தடைசெய்கின்றது. இது சித்திரவதைகளுக்கு எதிரான சமவாயத்தின் கீழும் குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில்
ஏறாவூரில் பொதுமக்களை மனிதத்தன்மையின்றி இழிவாக நடத்திய இராணுவத்திருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த இழிசெயலில் ஈடுபட்ட இராணுவத்தினர், இராணுவத்தளபதியின் உத்தரவிற்கு அமைவாக அங்கிருந்து உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதிக்கு பொறுப்பான அதிகாரி அங்கிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் அகற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.