சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் இன்று ஜுலை முதலாம் திகதி காலையில் பெய்ஜிங்கிலுள்ள தியன்ஆன்மென் சதுக்கத்தில் நடைபெற்றது.
நீதிதவறாது ஆட்சி புரிவது, ஊழல் ஒழிப்பு போராட்டம் ஆகியவற்றில் உறுதியாக ஊன்றி நின்று கட்சியின் தூய்மையைக் கெடுக்கும் அனைத்து விதமான வைரஸ்களையும் உறுதியாக நீக்க வேண்டுமென ஷிச்சின்பிங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டுநிறைவு கொண்டாட்டத்தில் தெரிவித்தார்.
தனது நூற்றாண்டு கால பயணத்தில் பொய்த்துப்போன எதிர்பார்ப்பு, ஜனநாயகம் போன்றவை இல்லாத ஒன்றாகி விட்ட பிறகும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிலைத்து நிற்ப்பது பற்றியே இந்த நாட்டுக்குள் அதிகமாக பேசப்படுகிறது என பிபிசி கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அண்மையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் பயணத் திட்டத்தின் வெற்றியின் போது கூட தேசபக்திக் களியாட்டமே முன்னிலை பெற்றிருந்தது.
அதில் ஒரு விண்வெளி வீரர் ‘கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் 100 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வீர அத்தியாயத்தை இது குறிக்கிறது’ என்று கூறினார்.
மீண்டும் புத்துயிர் பெறும் திறனிருந்தாலும் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதற்காக அக்கட்சி அதிக கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் நம்பிக்கை சற்றே குறையும் நிலை ஏற்பட்டால் கூட அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றி வருகிறது.
எனவே ஆட்சிக்கான சட்டபூர்வ அங்கீகாரம் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்த நூற்றாண்டு விழாவை கட்சியின் பழம்பெருமைகள், தற்கால வெற்றிகள், எதிர்காலச் சாதனைகள் ஆகியவற்றின் கலவையான ஒரு பிரசாரத்திற்கு அதன் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. அதன் மூலம் மேலும் வலுவடைய எண்ணுகிறது அக்கட்சி.
சீனாவில் ஒற்றை கட்சி ஆட்சியின் அதிகாரத்தைத் தொடந்து நிலைநிறுத்தும் விதமாக அதன் பிரசார தளங்கள், கல்வியாளர்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் கூட அணி திரட்டப்பட்டுள்ளனர்.