இலங்கையில் சீனாவின் துறைமுக நகர் திட்டம் தொடர்பாக அமெரிக்கா கடும் கரிசனை

0
209
Article Top Ad

Colombo Port City என்றழைக்கப்படும் சீனாவின் ஆதரவில் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்வது குறித்து தமது நாட்டின் முதலீட்டாளர்களுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஊடகவியலாளர்களுடன் நடத்திய மெய்நிகர் ஊடக சந்திப்பின் போதே இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு துறைமுக நகர சட்டம் தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடன் இன்று இடம்பெற்ற வட்ட மேசைமெய்நிகர் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்ளிட்ஸ் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டை தடைசெய்யப் போவதில்லை எனக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கொழும்பு துறைமுக நகர சட்டம் மற்றும் அதிலுள்ள குறைப்பாடுகள் குறித்து சில கரிசனைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு சீன நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும் அந்நிறுவனத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது சரியான விடயமாக அமையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுக நகரத்தில் வர்த்தகம் செய்வதற்கான விதிமுறைகள் குறித்து நிறுவனங்கள் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு துறைமு நகர சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து தாம் தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாகவும் ஊழல் செல்வாக்குகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபடத்தூண்டும் பலவீனமான அம்சங்கள் அதில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்வதை அமெரிக்கா தடுக்கவில்லை எனவும் எனினும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மாத்திரமல்லாமல் எந்தவொரு நிறுவனத்துக்குமான முதலீட்டுச் சூழல் குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாகவும் அலைனா பி. டெப்லிட்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.