இலங்கையில் கொரோனா நிலைமை மிகவும் கவலைக்கிடமான கட்டத்திற்குள் நகர்ந்துள்ளதை யதார்த்த நிலை பறைசாற்றுகின்றது.
மிகவும் தீவிரமாக பரவும் கொரோனா திரிபான டெல்டாவின் தாக்கம் அதிகரிக்கின்ற நிலையில் இன்றைய தினமும் 2,000ற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதன்படி கடந்த 7 நாட்களாக 2,000ற்கு மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,727 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைகள் பலவும் கொரோனா தொற்றாளர்களால் நிறைந்து காணப்படுவதுடன் சமாளிக்கக் கூடிய நிலையைத்தாண்டி நோயாளர்கள் வைத்தியசாலையின் நடைபாதையில் படுக்கைகளற்ற நிலையில் கிடக்கும் பரிதாபகரமான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், பல வைத்தியசாலையில் சாதாரண சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சில வைத்தியசாலைகளில் முற்றுமுழுதாக நிறுத்திவைக்கப்பட்டுஇ கொரோனா தொற்றாளர்களுக்கு மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகின்றது.
நிலைமை மோசமடைந்து இருப்பதாக வைத்திய தரப்பினரும் ஏனைய பிரிவினரும் அறிவித்துள்ளனர்.
முடக்கமா? கட்டுப்பாடா? வெள்ளியே முக்கிய முடிவு
இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடும் கொவிட்-19 தடுப்பு செயலணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) கூடும்.
இந்தக்கூட்டத்திலேயே அடுத்தக்கட்ட தீர்மானங்கள் எட்டப்படவுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா மற்றும் டெல்டா வைரஸூகளின் தொற்று வேகம் பரவலாக அதிகரித்துள்ளதால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு சுகாதார தரப்பினர் உள்ளிட்ட தொற்றொழிப்பில் பங்கேற்றிருக்கும் பிரிவுகளிடமிருந்து தரவுகளை அரசாங்கம் கோரியுள்ளதாக அறியமுடிகின்றது.
பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதா? நாட்டை ஓரிரு நாட்களுக்கேனும் முடக்கிவிடுவதா? என்பது தொடர்பிலும் முடிவுகள் எட்டப்படும்.
இந்நிலையில் தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கும் திருமண வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய பொதுநிகழ்வுகளுக்கான அனுமதிகள் மாகாணங்களுக்கு இடையிலான பொதுபோக்குவரத்து உள்ளிட்டவையை மீள பரிசீலனைக்கு உட்படுத்துவது குறித்தும் வெள்ளிக்கிழமை கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச ஊழியர்களை கடமைக்கு அழைத்தமை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படுமென அறியமுடிகின்றது.
கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை!
மட்டக்களப்பு – ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்நௌபர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் காணியில் இதுவரையில் 1,279 சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இன்னும் 700 சரீரங்களை மட்டுமே குறித்த பகுதியில் அடக்கம் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம், 50க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகும் நிலையில் சரீரங்களை அடக்கம் செய்வதற்கான மற்றுமொரு இடத்தினை சுகாதாரத்துறை மற்றும் நிபுணர்கள் விரைவில் அடையாளப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.