இலங்கையில் நாளாந்த உயிரிழப்புக்கள் 200ஐ எட்டும் என எச்சரிக்கை -நாடு மீண்டும் முடக்கப்படுமா?

0
212
Article Top Ad

 

புகைப்படம் – ஏஎவ்பி. படம்பிடித்தவர் இஸார கொடிகார

இலங்கையில் எதிர்வரும் வாரங்களில் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5000ஐக் கடக்கலாம் எனவும் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டக்கூடும் எனவும் முன்னணி மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா திரிபு வைரஸான டெல்டா சுகாதார அமைப்பையும் மருத்துவமனைகளையும் சோர்வடையச் செய்துள்ளதாகவும் இவ் வைரஸ் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் மூன்று வாரங்களில் நிலைமை மோசமடைய கூடும் எனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். வரவிருக்கும் வாரங்களில் இன்னும் அதிகமான கோவிட் இறப்புகள் நிகழும்.

ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது மருத்துவமனைகளுக்கு செல்ல பயப்படுவதன் காரணமாக அவர்கள் மத்தியில் இறப்புக்கள் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒரு வார காலத்தில் ஒட்சிசன் பற்றாக்குறையால் இறப்புகளைக் காணத் தொடங்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளன.

வரும் வாரங்களில் கொரோனாவிலிருந்து நாளாந்த இறப்புகள் குறைந்தது 200 ஐ எட்டும் என்றும் நாளாந்த நோயாளிகளின் எண்ணிக்கை ஐயாயிரம் வரை உயரும் என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இரண்டு முதல் மூன்று நோயாளிகள் அதிதீவிர மருத்துவ அறைகளில் கட்டில்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் உடனடியாக அமுல்படுத்தப்படாவிட்டால் டெல்டா மாறுபாட்டிற்கு எதிரான போர் மூன்று முதல் நான்கு வாரங்களில் உச்சத்தை அடையும்.

மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் என்று ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சமூக மருத்துவப் பேராசிரியர் சுெனத் அங்கம்பொடி தெரிவித்துள்ளார்.

தற்போது ஏற்பட்டு இருக்கும் மோசமான கொரோனா நிலைமை காரணமாக நாட்டை ஆகக்குறைந்தது 4 வாரங்களுக்கேனும் முடக்கிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நாட்டில் விரைவில் கடுமையான பயணக்கட்டுப்பாடோ அன்றேல் ஊரடங்கோ விரைவில் பிறப்பிக்கப்படலாம் என சமூக வலைத்தளங்களில் ஊடகவியலாளர்களும் மருத்துவர்களும் கேள்விக்குறிகளுடன் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊரடங்கு என்பது இறுதி ஆயுதமாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்திலும் அரசாங்கத்தரப்பினர் பல்வேறு அறிவிவித்தல்களை விடுத்துவிட்டு குறுகிய காலத்தில் அதற்கு முற்றிலும் மாறுபட்ட தீர்மானங்களை எடுத்தமை சுட்டிக்காட்டத்தக்கது.