கொரோனா காலத்தில் ‘ ஆறுதலளிக்கும் ‘ காட்போட் பிரேதப் பெட்டிகள் : ஏன்?

0
346
Article Top Ad
 சமூக வலைத்தளங்களைத் திறந்தால் தெரிந்த நண்பர்கள் உறவினர்களது மரணச்செய்திகள் மனதை பதபதைக்க வைக்கின்றன.
அடுத்து யாரோ எனத் தெரியாது மனது கவலையில் அங்கலாய்த்துநிற்கின்றது. இந்த நிலையில் உறவுகள் இழந்த சோதத்தில் வாடுபவர்கள் தற்போது நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியால் பெரும் துயரங்களை எதிர்கொள்கின்றனர்.
இதில் இறந்தவர்களுக்கான இறுதிக்கிரிகைகளைச் செய்வதற்கான செலவுகளும் அடங்கும்.
உயிரிழந்த குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை குறைப்பதோடு மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீங்கையும் தவிர்க்கும் வகையில்  இரத்மலானையிலுள்ள பொதியிடல் நிறுவனம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.

நூற்றுக்கணக்கான வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்திவைக்கக்கூடிய பெரும்  நிறுவனத்தின் ஒருபுறத்தில் இயந்திரக்கள் கார்ட்போட் மட்டைகளை அளவளவாக வெட்டிக்கொண்டிருக்கின்றன.

அதற்கு கீழிருந்து பணியாளர்கள் நால்வர் அதனை  எடுத்து ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கின்றனர்.  மறுபுறத்தே மடிக்கப்பட்ட காட்போட்டின்  மேலே உயர் ரக பசையைத்தடவி கீழ் பக்கத்தை அழுத்தமாக ஒட்டும்பணியில் சில பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

இன்னுமொரு பக்கத்தில் மூன்று பக்கமும் ஒட்டப்பட்ட காட்போட்டின் மேல் பக்கத்தினூடாக அடிப்பகுதியில் முப்பரிமாணமுடைய சிறிய காட்போட்களை வைத்து உறுதியை 100 கிலோ உடைகொண்டவர்களையும் தாங்கிக்கொள்ளும் படியாக  முன்னேற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றனர் பணியாளர்கள்.

பொருளாதாரக் கஷ்டத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு இந்த காட்போட் பிரேதப் பெட்டிகள் பெரும் ஆறுதலாகும் என்கிறார் இந்த திட்டத்திற்கான எண்ணக்கருவை முன்வைத்த  தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர் பிரியந்த சஹபந்து .
பயன்படுதப்பட்ட  காகிதங்களில் இருந்து மீள்சுழற்சிமுறையில் உருவாக்கப்பட்ட இந்த கார்ட்போர்ட் பிரேதப் பெட்டிகள் சந்தையில் விற்பனைசெய்யப்படும் குறைந்த பட்ச மர பிரேதப்பெட்டிகளின் விலைகளிலும் ஆறிலொரு மடங்கு குறைவானதாகும்.
   இலங்கையில் தற்போது விற்பனைசெய்யப்படும் பிரேதப் பெட்டியில் மிகவும் குறைந்த தரத்திலான மரத்தில் தயாரிக்கப்படும் பிரேதப்பெட்டிகளின் விலைகளே  ஆகக்குறைந்தது 30 000 ரூபாவாக அமைந்திருக்கையில் இந்த நிறுவத்தில் தயாரிக்கப்படும் கார்ட்போட் அட்டைகளாலான பிரேதப் பெட்டிகளோ 4500 டூபாவிற்கே விற்பனைசெய்யப்படுகின்றன.
இலங்கையில் கடந்தவாரத்தில் 11 ஆயிரத்தை தொட்டுவிட்ட கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில்  ஏற்கனவே சிலர் தமது உயிரிழந்த அன்புக்குரியவர்களின் இறுதிக்கிரிகைகளுக்காக இந்த கார்ட்போட் பிரேதப் பெட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
தற்போது  இந்த நிறுவனத்தினால் தினமும் 400 தொடக்கம் 500 வரையான கார்ட்போட் பிரேதப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன.
” நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் இதற்கு ஆதரவளிக்கின்றனர். இதனை விநியோகிப்பதே தற்போதுள்ள சவாலாக இருக்கின்றது. இதுதொடர்பாக நாம் கவனம்  செலுத்திவருகின்றோம் “என்கிறார் சஹபந்து
கொரோனாவால் இறந்தவர்களை அதிகமாக தகனம் செய்வதே வழமையாக இருக்கின்ற நிலையில் விலையுயர்ந்த பிரேதப் பெட்டிகளை  வாங்குவதில் பலனில்லை அத்தோடு அது சுற்றுச்சூழலுக்கும் கேடுபயக்கும் என சஹபந்து சுட்டிக்காட்டுகின்றார்.
‘ சுற்றுச்சூழல் விரும்பியான எனக்கு மரங்களை தறிப்பதில்  அழிப்பதில்  எள்ளளவிற்கும் விருப்பமில்லை . இலங்கையில் மரத்திலான பிரேதப் பெட்டிகளை எரிப்பதற்காக தினமும் 200ற்கு அதிகமான வளர்ந்த மரங்கள் வெட்டப்படுகின்றன.
இது சுற்றுச்சூழலுக்கு நாம் செய்யும் பெருந்தீங்காகும் . எனவேதான் கழிவுகளில் இருந்து மீள்சுழற்சிமுறையில் தயாரிக்கப்படும் இந்தக் காட்போட் பிரேதப் பெட்டிகள் குறைந்த விலையுடையதாக இருப்பதால் பொருளாதாரச் சுமையைக் குறைப்பது மட்டுமன்றி  சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும்’ என்று உறுதிபடக்கூறுகிறார் சஹபந்து
இலங்கையில்  கொரோனாவின் டெல்டா திரிபு தொடர்ந்தும் பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி கடந்த சில வாரங்களாக தினமும் 200  பேர் வரையானவர்களைப் பலியெடுத்துவரும் நிலையிலும்  புதிய புதிய அபாயகரத்திரிவுகள் தொடர்பாக எச்சரிக்கைகள் விடுக்கப்படும் நிலையிலும் இலங்கையில் தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் காலத்துக்கு காலம் பொதுமுடக்கம் நடைமுறைக்கு வரும் சாத்தியம் அதிகமாக உள்ளது.
இந்தக் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கைத்தரமும் மேலும் மேலும் வீழ்ச்சியடைந்து பாசத்திற்குரியவர்கள் மரணித்தால் இறுதிச்சடங்குகளைக் கூட நடத்தமுடியாத பரிதாபகரமான நிலை பலருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படியான நிலையில் காட்போர்ட் பிரேதப் பெட்டிகள் போன்ற முன்முயற்சிகள் ஓரளவிற்கு ஆறுதலாக அமையும்  இது தொடர்பாக கருத்துவெளியிட்ட  மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரியந்த சஹபந்துவின் காட்போட் பிரேதப் பெட்டி எண்ணக்கரு தற்போது இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலிருந்தும் கவனம் பெறத்தொடங்கியுள்ளது.
கடந்தவாரத்தில்  வியட்நாம் நாட்டிற்கு  1200 காட்போட் பிரேதப் பெட்டிகள் தாங்கிய இரண்டு கொள்கலன்கள் ஏற்றுமதிக்காக  அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
 பொருளாதார வறுமையுடையவர்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழலில் அக்கறையுடையவர்கள் இலங்கையில் மட்டுமன்றி உலகின் எப்பாகத்தில் இருந்தாலும் இந்தக்கொரோனா காலத்தில்  கேள்வியுற்ற ஆறுதலான செய்திகளிலொன்றாக இந்த காட்போட் பிரேதப் பெட்டிகள் அமையும் என்பதில் சந்தேகமில்லை
======================
அருண் ஆரோக்கிநாதர்
=======================