US Open Tennis: நொவாக் ஜோகோவிச்சின் கலைந்த பெரும் கனவு

0
248
Article Top Ad

டென்னிஸ் போட்டிகளில் வருடத்தில் நடைபெறும் நான்கு மிகப்பெரும் போட்டிகளிலும் சம்பியன் பட்டத்தை வென்ற வீரர் என்ற சாதனையை இலக்குவைத்திருந்தார் சேர்பிய முதன்நிலைவீரர் நொவாக் ஜோகோவிச்.

வருடத்தில் நடைபெறும் நான்கு பெரும் டென்னிஸ்போட்டிகளையும் வெற்றிபெறுவதற்கு கிராண்ட்ஸ்லாம் Grandslam என்றோ கலெண்டர் கிராண்ட்ஸ்லாம் Calender-Grandslam என்றோ அழைப்பர்

இந்த வருடத்தின் முதன் மூன்று மிகப்பெரும் டென்னிஸ் போட்டிகளான அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டி ,பிரெஞ்சுப்ப கிரங்ப் போட்டி மற்றும் விம்பிள்டனில் சம்பியன் பட்டம் வென்றிருந்த ஜோகோவிச் அமெரிக்க பகிரங்க போட்டிகளிலும் சம்பியனாகி இந்த அரிய சாதனையை நிலைநாட்ட கங்கணங்கட்டியிருந்தார்.

இதன்படி இம்முறை மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ஜோகோவிச் கடும் சவால்களை கொடுத்த வீரர்களை முறியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

வரலாற்றுச் சாதனையின் விளிம்பில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் டானில் மெட்வடேவை எதிர்கொண்டார்.

இறுதிப்போட்டியில் சற்றும் எதிர்பாராத வகையில் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார் ஜோகோவிச். 25 வயதுடைய டானில் மெட்வடேவ் கிராண்ட்ஸலாம் போட்டிகளில் வென்ற முதலாவது சம்பியன் பட்டமாக இது அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தோல்வியை ஜோகோவிச் ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் சம்பியன்பட்டம் வென்ற மெட்வடேவ் கூறிய வார்த்தைகள் டென்னிஸ் உலகில ஜோகோவிச்சின் பெருமையை பறைசாற்றுவதாக இருந்தது. ‘ இந்த வருடத்திலும் உங்கள் டென்னிஸ் வாழ்விலும் நீங்கள் சாதித்தவை நீங்கள் தான் வரலாற்றில் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர் என்று கூறுவதில் பெருமைப்படுகின்றேன்’ என்றார் மெட்வடேவ் .

இம்முறை அமெரிக்க போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றிருந்தால் 1969ம் ஆண்டிற்குப் பின்னர் வருடத்தின் நான்கு கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்ற வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றிருப்பார் . 1969ல் இந்த ச்சாதனையை அவுஸ்திரேலிய ஜாம்பவான் ரொட் லேவர் நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பகிரங்கப் போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தால் ஜோகோவிச் சுவிற்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் ஸ்பெயின் வீரர் ரவேல் நடால் ஆகியோரைத் தாண்டி அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியிருப்பார். தற்போது மூவரும் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

டோக்கியோவில் கலைந்த கோல்டன் ஸ்லாம் கனவு: ஏமாற்றத்துடன் வெளியேறிய ஜோகோவிச்