ரஷ்யாவின் இராணுவ வலிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் 38 நிறுவனங்கள் மற்றும் 24 தனிநபர்களுக்கு எதிராக கனடா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்புத் தொழில்துறை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தொழில்நுட்ப மேம்பாடு, இணையவழிச் செயற்பாடுகள் மற்றும் ரஷ்யாவின் போருக்கான நிதி ஆதாரங்களைப் பேணுவதற்குத் துணைபோகும் கட்டமைப்புகள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand), பிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டத்துக்கு இணையாக, கடந்த நவம்பர் 9ஆம் திகதி இந்தத் தடைகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனேடிய அரசாங்கத்தின் அறிவிப்பின்படி, ரஷ்யாவின் பாதுகாப்புத் தொழில்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் இந்தப் புதிய தடைகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினரும், ரஷ்யாவின் இணையவழித் தாக்குதல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ரஷ்யாவின் போர்ப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் துணைபோகும் நிதி வலையமைப்புகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கிரிப்டோ நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி இடைத்தரகர்களும் இந்த நடவடிக்கையின் இலக்குகளாக உள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதையும், இராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்வதையும் கடினமாக்குவதே இந்தத் தடைகளின் முக்கிய நோக்கம் என கனடா தெரிவித்துள்ளது.
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் ரஷ்யாவின் திறனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனடா முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து, தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்தும் வரை அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தங்களைத் தொடர்ந்து அதிகரிக்க கனடா உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடைகள் கனடாவின் ‘விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின்’ கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குதல், அவர்களுடனான நிதிப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் உக்ரைனின் இறையாண்மையை மீறியமை மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 3,500க்கும் மேற்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா தடைகளை விதித்துள்ளது. மேலும், 700க்கும் மேற்பட்ட கப்பல்களும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில், ரஷ்யாவின் இராணுவ உற்பத்தி மற்றும் அதற்கான நிதி ஆதாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச அழுத்தங்களின் ஒரு பகுதியாகவே கனடாவின் இந்தப் புதிய நடவடிக்கை அமைந்துள்ளது.



