கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலைமையைக் குறைக்கும் நோக்கிலும், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கம் 142.1 பில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான புதிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
பல ஆண்டுகளுக்கான அரசாங்கச் செலவினங்கள் மற்றும் வரிச் சலுகைகளை உள்ளடக்கிய இந்தத் திட்டம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் சர்வதேச சந்தைகளில் கனடாவின் பங்களிப்பை அதிகரித்தல் ஆகிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

2026-2027 நிதியாண்டில் கனேடிய அரசாங்கத்தின் மொத்தச் செலவினம் 603 பில்லியன் டொலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை, அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை 62.3 பில்லியன் கனேடிய டொலராக அமையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன. தகுதியுடைய முதலீடுகளுக்கான செலவுகளை உடனடியாகக் கழித்துக்கொள்ள அனுமதிக்கும் வரிச் சலுகை மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 36 பில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கனடாவுக்குப் புதிய முதலீடுகளைக் கவர்வதுடன், தொழில்துறை வளர்ச்சியையும் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
மேலும், எரிசக்தி, உட்கட்டமைப்பு மற்றும் கலாசாரத் துறைகளின் மேம்பாட்டிற்கும் கணிசமான நிதி ஒதுக்கப்படவுள்ளது. கனடாவின் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் 25 பில்லியன் டொலர் பெறுமதியான தேசிய செல்வ நிதியத்தையும் உருவாக்கும் திட்டம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதற்காகவும் 7.7 பில்லியன் கனேடிய டொலர் ஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் இராணுவத் தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் 70 சதவீதத்தை கனேடிய நிறுவனங்களுக்கு வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவுடனான வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் அந்நாட்டின் வர்த்தகக் கொள்கைகளால் கனடாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படக்கூடும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதன்படி, 2026ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதமாகவும், 2027ஆம் ஆண்டில் 1.7 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகத் தொடர்புகளைத் தொடர்ந்தும் பேணிக்கொண்டே, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதன் மூலம் ஏற்றுமதிக்கான புதிய சந்தைகளை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
குறிப்பாக, 2035ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவைத் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இவ்வாறு முதலீடு, உட்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு கனடாவின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.



