அடுத்த வருடத்துக்குள் புதிய அரசமைப்பு உறுதி- ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு

0
155
Article Top Ad

“புதிய அரசமைப்பு ஒன்றை வழங்குவதற்கு முன்பு நான் உறுதியளித்தவாறு, அன்று நான் உறுதியளித்தவாறு அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்.”

– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உறுதியளித்தார்.

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தியையொட்டி இன்று அநுராதபுரம், சாலியபுர இராணுவ முகாமில் பிரதான நிகழ்வு நடைபெற்றது.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகப் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை வரலாற்றின் முதல் தடவையாக, அரசியல்வாதி அல்லாத ஒருவர், நாட்டின் முப்படைத் தளபதியாகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றமை குறித்து நான் பெருமையடைகிறேன். நான் ஓர் இராணுவ அதிகாரி என்ற வகையில், நாட்டுக்காக எனது கடைமையைச் செய்தேன். அதனால் தான் இவை சாத்தியமாகின.

பாதுகாப்புச் செயலாளராக எனது கடமையை நிறைவேற்றினேன். அதனால் தான், மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து, என்னை இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருக்கிறார்கள்.  இராணுவத்தினர் என்ற வகையில், உங்கள் அனைவருக்கும் இது பெருமைக்குரிய விடயமாகுமென்று நான் நினைக்கின்றேன்.

விசேடமாக இன்று, முப்படையினருக்கும் நன்றி செலுத்த வேண்டும். இந்நாட்டில் கடந்த 2 வருட காலத்தில் நீங்கள் செய்த சேவைக்காகவும், நாம் முகங்கொடுத்த கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதுக்குச் செய்த தியாகங்கள், செய்த சேவைகள், சுகாதாரப் பிரிவினர் மற்றும் ஏனையோருடன் இணைந்து, முக்கியமாகத் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளிலும் அதேபோன்று தடுப்பூசி வழங்குவதிலும் நீங்கள் ஆற்றிய சேவை மிகச் சிறப்பானது.

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றலில், உலக நாடுகளுக்கு மத்தியில் நாம் முன்னிலை வகிக்கும் நாடாக மாறியுள்ளோம். அது நீங்கள் ஆற்றிய சேவையினால் தான் சாத்தியமானது. அதற்காக, உங்கள்  அனைவருக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன்.

அதேபோன்று, இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிப்பதாக, நான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூறினேன். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை, நான் ஒரு கொள்கை ரீதியில் முன்னெடுத்துள்ளேன்.  அதற்கு அவசியமான, தகுதிவாய்ந்த அதிகாரிகளை, உரிய பதவிகளுக்கு நியமித்துள்ளேன். பாதுகாப்புச் செயலாளராகவும் சரி படைத் தளபதிகளாகவும் சரி, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாகவும் சரி, உரிய இடங்களுக்கு உரியவர்களை நியமித்துள்ளேன்.

அதேபோன்று, முப்படையில் காணப்படும் புலனாய்வுப் பிரிவினரின் மனநிலையை நான் மேம்படுத்தியுள்ளேன். இராணுவ அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் தேவையின்றி ஏற்படுத்தப்பட்டிருந்த தடைகளைத் தகர்த்திருக்கிறேன். அவர்கள் அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவசியமான அதிகாரங்களை வழங்கியுள்ளேன்.

இந்நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் உருவாகாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது பிரதான பொறுப்பாக இருக்கின்றது. நாம் பிரிவினைவாத தீவிரவாதத்தைத் தோற்கடித்தோம். தற்போது அதை நாம் தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். தீவிரவாதம் தோன்றுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வ வழங்க வேண்டும். அந்தப் பிரதேசங்களை நாம் முன்னேற்ற வேண்டும்.  அவ்விடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது அவசியமாகும்.

அடிப்படை மதவாதத் தீவிரவாதம், இன்று முழு உலகிலும் காணப்படுகின்றது. நாம் அதற்கு முகங்கொடுக்க வேண்டும். அவ்வாறான நிலைமையொன்று, எம் நாட்டில் மீண்டும் உருவாகக் கூடாது. இது எந்தவொரு மதத்தையும் தாக்கும் விடயமல்ல. நாம் எல்லோரும் அறிந்த முழு உலகமும் அறிந்த இந்நிலைமைக்கு, நாம் முகங்கொடுக்க வேண்டும். இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நான் மக்களுக்கு உறுதியளித்துள்ளேன். நான் அதனை நிறைவேற்றத் தியாக மனப்பான்மையுடன் செயற்படுகிறேன்.

பாரிய எதிர்பார்ப்புகளுடனேயே என்னை இந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருக்கிறார்கள். நான் கடமையேற்ற காலம் முதலான கடந்த இரண்டு வருடங்களில், முழு உலகமும் வரலாற்றில் எப்போதும் முகங்கொடுக்காத நிலைமைக்கு, கொவிட் தொற்று காரணமாக முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, நாம் கடந்த இரண்டு வருடங்களாகப் போராடியுள்ளோம். நாட்டை முடக்குதல், பல்வேறு தடைகள் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நிலையில் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டது. நான் அதற்காக நியாயம் கூறிக்கொண்டிருக்கப் போவதில்லை. மக்களுக்காக இந்நிலைமையிலும் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

என் மீதும் அரசின் மீதும் மக்கள் வைத்த எதிர்பார்ப்புக்கமைய செயற்படவில்லை என்று அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். நான் மட்டுமன்றி அமைச்சர்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஆனாலும், கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்தி, புதிய இயல்பு நிலைமையின் கீழ் இந்நாட்டைத் திறந்து, புதிய உத்வேகத்துடன் இந்நாட்டை முன்னேற்றுவேன் என்று, மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அதற்காக நாம் அனைவரும் இணைந்து ஒன்றாகச் செயற்பட வேண்டும்.

அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசமைப்பு ஒன்றை வழங்குவதற்கு, அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன். மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்.

நேற்று மாலை நான் ருவன்வெலிசாயவை வழிபடச் சென்றிருந்தேன். அங்கு படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது, இளம் வயது பிக்கு ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கேட்டார், ‘ஜனாதிபதியே, ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதாகக் கூறினீர்களே. நாம் அதனை எதிர்பார்த்திருக்கின்றோம்’ என்றார். நான் இவ்வருட இறுதிக்குள் அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

சேதனப் பசளைப் பயன்பாடு மற்றும் பசுமை விவசாயத்தை உருவாக்குவதென்பது, நான் அளித்த வாக்குறுதியாகும். அது தான் சரியானதும்கூட.  மக்களுக்காக, எதிர்காலச் சந்ததியினருக்காக நாம் அதனை முன்னெடுக்க வேண்டும். அதைச் செய்தேயாக வேண்டும். அது மிகவும் கடினமான விடயமாகும்.

ஊழலை இல்லாதொழிக்க வேண்டுமென்று, மக்கள் என்னிடம் எதிர்பார்த்திருக்கின்றனர். அதனை எதிர்பார்த்துத் தான், அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு  இராணுவ அதிகாரிகளை நியமித்தேன். அது பாரிய சவாலாகும். ஆனாலும் நாம் அதனைச் செய்ய வேண்டும்.

எந்தத் தரப்பினராக இருந்தாலும், அமைச்சரவோ பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ, அதிகாரிகளாகவோ இருந்தாலும் நாட்டுக்காக நாம் ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும். நான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறேன். நான் எந்த வகையிலும் ஊழலில் ஈடுபடவில்லை. ஈடுபடவும் மாட்டேன்.

ஜனாதிபதி என்ற வகையில் நான் இயலுமான வரையில் செலவினங்களைக் குறைத்துள்ளேன். நான் ஒரு முன்னுதாரணத்தை வழங்கியுள்ளேன். அந்த முன்னுதாரணத்தை நீங்களும் வழங்குங்கள் என்று அமைச்சர்களிடமும் கேட்டுக்கொண்டேன்.

இந்த ஊழலைத் தடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு மக்களிடமும் நான் கேட்டுக்கொள்கின்றேன். மக்களுக்காகச் செயற்றிறன்மிக்க பணியை வழங்குமாறு, அதிகாரிகளிடமும் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  எதிர்வரும் வருடங்களில் இந்நாட்டை சுபீட்சத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்கு, அனைவரதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்” – என்றார்.
……..