விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத அரசு எதற்கு? ராஜபக்ஷ அரசு உடன் பதவி விலகவேண்டும் – சஜித் வலியுறுத்து

0
164
Article Top Ad

“நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப அதிகரித்துச் செல்கின்றன. விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத அரசு எதற்கு? நாட்டைக் கொண்டுசெல்லும் திறன் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று வலியுறுத்தினார்.

‘எதிர்க்கட்சியின் மூச்சு” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மருத்துவமனை உபகரணங்களை தந்திரிமலை பிரதேச மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டைக் கட்டியெழுப்புவது மாத்திரமன்றி, நாட்டின் பொருளாதாரத்தைக்கூட முகாமைத்துவம் செய்துகொள்ள முடியாததை இந்த அரசு நிரூபித்துக் காட்டியுள்ளது.

நாட்டைக் கொண்டு செல்லும் திறன் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு இந்த அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும்.

நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப அதிகரித்துச் செல்லும்போது, அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனச் சொல்லுவதாயின், அரசு எதற்கு எனக் கேட்கின்றேன்.

இந்த நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளில் இருந்து மக்களை மீட்டு, அவர்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திறன் அரசிடம் இல்லையென்றால், அதை ஏற்றுக்கொண்டு உடனடியாகப் பதவி விலக வேண்டும்” – என்றார்.

=======================

மக்களின் வயிற்றில்
அடிக்கின்றது அரசு!

பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக
ஐக்கிய மக்கள் சக்தியினர் போர்க்கொடி 

“69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலையைப் பாரியளவில் அதிகரித்து மக்களின் வயிற்றில் அடிக்கின்றது.”

– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

பால்மா,  சமையல் எரிவாயு, கோதுமை மா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு அக்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அரசு மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகின்றது என்பதற்கு இதுவே சான்று என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

எனவே, மக்களுக்கு நிவாரணங்ளை வழங்குவது தொடர்பில் அரசு முடிவொன்றை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
………