தமிழரைச் சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்தவைத்தவர்கள் பௌத்த சிங்களப் பேரினவாதிகளே! இராஜாங்க அமைச்சரின் கருத்துக்கு சிறீதரன் எம்.பி. தக்க பதிலடி

0
150
Article Top Ad

 

“தமிழ் இளைஞர்களைச் சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் கருத்துக்குப் பதிலளிக்கும்போதே சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த வாரம் நடைபெற்ற நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்துக்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய, கிராமிய மற்றும் பிரதேச நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, ‘சயனைட் குப்பிகளையும், புத்தகங்களையும் ஏந்திய வடக்கு மாகாண இளைஞர்களை இன்று புத்தகங்களையும், பேனாவையும் ஏந்த வைத்திருப்பதாகவும், இந்த நல்லெண்ணத்திற்கு வித்திட்டவர்கள் இன்றைய ஜனாதிபதியும், பிரதமருமே’ என்றும் குறிப்பிட்டிருந்த கருத்து உண்மைக்குப் புறம்பான புனைவாகும். அது அமைச்சரின் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையையே எடுத்துக்காட்டுகிறது.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்தோ, அதன் வரலாறு பற்றியோ, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோற்றுவாய் குறித்தோ இராஜாங்க அமைச்சர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், இத்தகைய கருத்துக்களை வெளியிட முன்னராவது வரலாற்றை அறிவதற்கு அவர் முயற்சித்திருக்க வேண்டும். இந்த நாட்டில் எழுபது ஆணு;டுகளுக்கு மேலாகப் புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டது யார் என்பதையும், தமது சொந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து, அமைதிவழியில் போராடிப் பெறமுடியாதுபோன அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தமிழர்கள் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதை இனியாவது இராஜாங்க அமைச்சர் கற்றுக்கொள்வது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு தேவையானதாக அமையும்.

சுதந்திர இலங்கையில் என்ன நிகழ்ந்தது என்பதை அப்போது பிறந்தேயிராத அமைச்சர் அறிந்திருக்க மாட்டார். அதன் விளைவாகத்தான் அவர் வெளியிட்டுள்ள கருத்தும் அத்தனை அபத்தமாக அமைந்துள்ளது. 1957 இலும், 1965 இலும் இலங்கையில் இனச் சமத்துவத்தை அங்கீகரிக்க அடிப்படையாக அமைந்த பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், டட்லி – செல்வா ஒப்பந்தத்தையும் சிங்கள அதிகார பீடங்கள் தான் கிழித்தெறிந்தன.

பன்மைத்துவமற்ற அரசியலமைப்பை உங்கள் இனத்தவர்கள் தான் உருவாக்கினார்கள், பௌத்தத்தை மட்டும் முதன்மை பெற வைத்து, தரப்படுத்தலை சிங்களத் தலைவர்களே மேற்கொண்டார்கள், தமிழ்மொழியைப் புறக்கணித்து, தமிழர் தாயகத்தில் நிலவிய மரபுரிமை சார்ந்த கூட்டு வாழ்வைச் சிதைத்து, சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள், இனவாதிகளை உருவாக்கி எம்மின மக்களை வெட்டிச் சரித்தும், சொத்துக்களை அழித்தும், தீயிட்டுக் கொழுத்தியும், தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிங்கள ‘ஸ்ரீ’ ஐ கொதிக்கும் தாரால் குறிவைத்தும், பச்சிளம் குழந்தைகளை கொதித்த தார்ச்சட்டிகளுள் வீசி எறிந்தும், தமிழ் இளைஞர்களின் கண்களை உயிரோடு தோண்டி எடுத்தும் ஓரினத்தின் இருப்பை அடியோடு ஆட்டம்காண வைத்து, அவர்களின் உணர்வுகளை கொதிநிலைக்கு இட்டுச்சென்றது யாரென்பதை இந்த உலகம் அறியும்.

தமிழர்கள் ஒரு அறிவார்ந்த சமூகம் என்பதை எண்பித்த வரலாற்றுச் சாட்சியமாய், தமிழர்களின் தனிப்பெரும் கல்வி அடையாளமாய் இருந்த தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை 1981 யூன் 30ம் திகதி நள்ளிரவு தீயிட்டுக் கொழுத்தி எமது இனத்தின் அறிவாண்மையைச் சிதைக்கும் செயலில் சிங்கள இனவெறியர்கள் ஈடுபட்டதை, அப்போது ஆறு வயதுச் சிறுவனாக இருந்த நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். இந்த அவலம் மிகுந்த வரலாற்றால் வெஞ்சினம் கொண்ட இளைஞர்கள் தான், வெகுண்டெழுந்து எமக்கான வரலாற்றைப் படைத்தார்கள். அடக்கப்படுகிற போது விடுதலை பெற வேண்டுமென்ற உணர்வு மனித சமூகத்தின் தன்னியல்பான குணாம்சம். அதனையே எங்கள் இளைஞர்களும் செய்தார்கள். அவர்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்களல்ல. ஆயுதங்களை அவர்கள் விரும்பி ஏற்றவர்களும் அல்ல. தங்களையும், தங்கள் இனத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக போராடி அதற்காகவே தங்கள் உயிர்களை ஈர்ந்தார்கள்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனே ‘ஆயுதங்களை நாம் ஒருபோதும் விரும்பி ஏற்கவில்லை. அவை எம்மீது வலிந்து திணிக்கப்பட்டவையே’ என்று 1985 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றுக்கு  வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றைவிட சிங்கள இனவாத அரசு காலம்காலமாக மேற்கொண்டுவந்த தமிழினப் படுகொலைகளும், தமிழர்களின் வாழ்வியல்ப் போக்கைத் திசைமாற்றியதில் பெரும் பங்கு வகித்தன. வடக்கு இளைஞர்களைத் தாம் புத்தகமும், பேனாவும் தூக்க வைத்திருப்பதாகப் பெருமிதம் கொள்ளும் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, இனவாத அரசால் வயதுவேறுபாடற்று மேற்கொள்ளப்பட்ட சிறுவர் படுகொலைகள் குறித்தும் அறிய முற்பட வேண்டும். நவாலிப் படுகொலை, நாகர்கோவில்ப் பாடசாலைப் படுகொலை, கொக்கட்டிச்சோலைப் படுகொலை, வாகரைப் படுகொலை, செஞ்சோலைப் படுகொலை, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் படுகொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட ஆயிரக் கணக்கான அப்பாவிச் சிறுவர்களின் உயிரிழப்புக்களுக்கும், இறுதிப் போரின்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து காணாமலாக்கப்பட்ட பலநூற்றுக் கணக்கான சிறுவர்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் திராணியற்ற பேரினவாத நாட்டில், தமிழ் மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அக்கறையும், பெருமிதமும் அடைவது நகைப்புக்கிடமான செயலாகும்.

வரலாறு இவ்வாறிருக்க, நல்லெண்ணத்திற்கு வித்திட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது எம் இனம் மீது பிரயோகித்துவரும் அடிப்படை வன்முறைகள் கூடவா அமைச்சரின் கண்களுக்கு இன்னும் புலப்படவில்லை?. நாம் கண்ணீர் விட்டு அழவும் தடையுத்தரவு தருகின்றீர்கள். ஒவ்வொரு அப்பாவித் தாய், தந்தையின் நெஞ்சிலும் ஆணியால் அடிக்கிறீர்கள், தங்கள் தாய், தந்தையரின் கல்லறைகள் இல்லாது போன காலத்திலும், அவர்கள் புதையுண்ட நிலங்களை முத்தமிடத் துடிக்கின்ற பிள்ளைகளின் தலையிலே சம்மட்டியால் அடிக்கின்றீர்கள். அவர்களை நினைந்து அழுவதையும், தொழுவதையும் பயங்கரவாதம் என பறைசாற்றுகிறீர்கள். இலங்கை தேசத்தில் வாழ்கின்ற சிங்கள தேசிய இனம் போலவே நாமும் ஓர் தேசிய இனமாக, எமக்கென்றோர் தனித்துவமான பண்பாட்டு, விழுமியங்களோடு இந்த வரலாற்றுத் துயர்களை எல்லாம் மறந்து வாழ முற்படும் வேளையில் சர்வதேச மனித உரிமை சாசனங்களை மீறி, இலங்கையின் உள்நாட்டு அடிப்படை உரிமைகளுக்கு முரணாக, சர்வதேச சமவாயங்களின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட அங்கீகரிக்கத் தவறி, எமது சமூக, பண்பாட்டு, விழுமியங்களை நிராகரித்து ‘பௌத்த புராண, இதிகாசமான மகாவம்ச சிந்தனைகளிலிருந்து சிங்களதேசம் மீண்டு வந்து தமிழ் மக்களுக்கு சமத்துவமான தீர்வொன்றைத் தருமென்று நான் துளியேனும் நம்பவில்லை’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரனின் சிந்தனையை மெய்ப்பிப்பதாகவே உங்கள் செயற்பாடுகள் இன்றும் அமைந்துள்ளன.

கைதுகள், காணாமலாக்கல்கள், நில ஆக்கிரமிப்பு, மரபுரிமைச் சின்னங்களை அழித்தல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் என தமிழ்த்தேசிய இனம் மீதான உங்களின் அடிப்படை இனவன்முறைகள் இன்னும் இன்னும் அதிகரித்துச் செல்லும் அதிபயங்கரமான சூழலில் எமது போராட்டம் குறித்து கருத்துரைப்பதற்கு அருகதையற்ற இராஜாங்க அமைச்சர், சயனைட் குப்பியும், துப்பாக்கியும் ஏந்திய எங்கள் பிள்ளைகளை தாமே புத்தகங்களை ஏந்த வைத்திருப்பதற்காக தெரிவித்துள்ள கருத்தை அவரது அரசியல் அறியாமையின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்” – என்றார்.