கொதிக்கின்றது எமது வயிறு; மரணச் சான்றிதழ் வேண்டாம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்

0
201
Article Top Ad

வவுனியாவில் 1700 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியா, ஏ – 9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டக்  கொட்டகை முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளையும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களையும் தாங்கியிருந்தனர்.

இதன்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“1700 ஆவது நாளாக நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். எங்களது பிள்ளைகளுக்கு எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. ஜனாதிபதி மரணச் சான்றிதழ் வழங்குவதாகக் கூறியுள்ளார். எந்தவொரு தாயும் மரணச் சான்றிதழ் வாங்குவதற்குத் தயாராக இல்லை. அதை ஜனாதிபதி சொன்ன நாளில் இருந்து தாய்மார் தேம்பித் தேம்பி அழுகின்றார்கள். ஜனாதிபதி அமெரிக்கா சென்று தனது பேரப்பிள்ளையைத் தூக்கி மழலை பொழிகின்றார்.

நாங்கள் எமது பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு போராடிக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதிக்கு இருக்கின்ற பாசம் தானே எங்களுக்கும் எங்கள் பிள்ளைகள் மேல் இருக்கும். அம்மா என்று சத்தம் கேட்கும்போது எமது வயிறு கொதிக்கின்றது. கண்கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன. கோட்டபாய துரோகி. இராணுவத்தினரிடம் நாம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழை எவ்வாறு வழங்க முடியும்?” – என்றார்.
……,