கொலையாளிகள் எவராக இருந்தாலும் கட்டாயம் தண்டிக்கப்பட்டே தீரவேண்டும் – சரத் பொன்சேகா எம்.பி. வலியுறுத்து

0
210
Article Top Ad

“11 அப்பாவி பிள்ளைகளைக் கடத்திச் சென்று கப்பம் கோரி, அது கிடைக்காததால், அந்தப் பிள்ளைகளைக் கொலை செய்திருந்தால், இராணுவத் தளபதியல்ல எவராக இருந்தாலும் கட்டாயம் தண்டனை கிடைக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த 11 இளைஞர்கள் கடத்தப்பட்டபோது வசந்த கரன்னாகொட கடற்படை தளபதியாக இருந்தார். நான் அந்தக்  காலத்தில் இராணுவத்துக்குக் கட்டளைகளை வழங்கினாலும் இப்படியான அநியாயங்களைச் செய்ய அனுமதிக்கவில்லை.

இவ்வாறான செயல்களைச் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன். கரன்னாகொடவுக்கு விடுதலை வழங்கப்பட்டாலும் – வழக்கு திரும்பப் பெறப்பட்டாலும் தனிப்பட்ட ரீதியில் அதனை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.

படைத்தளபதியாக இருந்தாலும் வேறு ஒருவராக இருந்தாலும் கொலை செய்திருந்தால் – குற்றம் செய்திருந்தால், அந்த நபருக்குக் கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும்” – என்றார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நலன் அறிய, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அங்குகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குச் சென்றிருந்தபோது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே சரத் பொன்சேகா எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.