அரச புலனாய்வு அச்சுறுத்தல்களால் நாட்டை விட்டு வெளியேற எத்தனிக்கின்றனர் தமிழ் இளைஞர்கள் கனேடியத் தூதுவரிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு 

0
154
Article Top Ad

தமிழ் இளைஞர்கள் அரச புலனாய்வு அச்சுறுத்தல்களால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அவரது காரியாலயத்தில் இன்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினரால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசு கொரோனாவைக்  காரணம் காட்டி தடைகள் விதிப்பது தொடர்பாகவும், அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்துகொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் சிறிதரன் எம்.பி. எடுத்துரைத்தார்.

இதேவேளை, அரசு பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடத்துவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அரச புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும், தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும், தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களைத் திணிப்பது தொடர்பாகவும் இதன்போது சிறிதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மாகாண சபைகளினுடைய அதிகாரத்துக்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன என்றும், வெளியில் காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும்போது இருக்கின்ற அதிகாரங்களையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதுவரை மாகாண அரசின் அதிகாரத்துக்குட்பட்ட வடக்கு மாகணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகின்றது எனவும் கனேடியத் தூதுவருக்குச் சிறிதரன் எம்.பி. தெரியப்படுத்தினார்.

கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும், ஜெனிவா தீர்மானங்களில் கனேடிய அரசு மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசுக்கு சிறிதரன் எம்.பி. நன்றி தெரிவித்தார்.

கனேடிய அரசு மனிதாபிமானத்துடனும் பக்கர்ச்சார்பு இன்றியும் தொடர்ந்தும் செயற்படும் எனவும், ஜெனிவா தீர்மானங்களுக்கு கனேடிய அரசு ஒத்துழைப்புத் தரும் எனவும் கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் வழங்கிய உறுதிமொழியோடு கலந்துரையாடல் சுமுகமாக நிறைவடைந்தது.