கோட்டாவால் இலங்கையே இல்லாமல்போகும் நிலை! – சஜித் அணி பகிரங்க எச்சரிக்கை

0
171
Article Top Ad

 

“நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக் குழுவால், ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பது மக்களுக்கு இல்லை என்றாலும் அது நடைமுறைப்படுத்தப்படும். இறுதியில் நாடும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குருநாகலில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போதுதான் நாட்டு மக்களுக்கு சிறப்பாக செய்யப் போகின்றார். அதற்கு இதுதான் சரியான நேரம் என அவர் உணர்ந்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசைக் கவிழ்க்க கோட்டாபாய ராஜபக்ச உட்பட இந்தக் குழுவினர் இனவாதம் மற்றும் மதவாதத்தைப் பயன்படுத்தினர். இனங்களுக்கிடையில் ஆத்திரத்தைத் தூண்டியதுடன் சூழ்ச்சி மற்றும் பயங்கரவாத்தை ஏற்படுத்தினர். இவற்றைப் பயன்படுத்தியே 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசைக் கவிழ்த்தனர்.

இரண்டு வருடங்களின் பின்னர் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நித்திரையில் இருந்து விழித்தவர் போல், கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி செயலணிக் குழுவை நியமித்துள்ளார்.

நாட்டில் உள்ள படித்த புத்திசாலி மக்களுக்கு இதனை நாங்கள் விளக்கப்படுத்த வேண்டியதில்லை. எதற்காகத்  தயாராகி வருகின்றனர்? நாட்டை எங்கு கொண்டு செல்லப் போகின்றனர்? கடந்த இரண்டு ஆண்டுகளில் ‘ஒரு நாடு – ஒரு சட்டம்’ அமுல்படுத்தப்பட்டதை நாங்கள் நன்றாகப் பார்த்தோம். ஜனாதிபதி இவ்வாறு நாட்டை எந்தத் திசை நோக்கி கொண்டு செல்கின்றார் என்பதை மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் நியமித்த ஜனாதிபதி செயலணிகளை நோக்கிப் பார்க்கும்போது, அவை பற்றி சிரித்தாலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக்குழுவால், ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பது மக்களுக்கு இல்லை என்றாலும் அது நடைமுறைப்படுத்தப்படும். இறுதியில் நாடும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகும்” – என்றார்

ராஜபக்ச அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே தமது இலக்கு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையைச் சல்லி காசுக்கு விற்பனை செய்ய இடமளிக்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு கடந்த காலத்தில் தேசாபிமானம், தேசப்பற்று, இறையாண்மை பற்றி பேசிய அனைத்து கதைகளும் இன்று வெற்றுப்பேச்சுக்களாகியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

“அரசின் தூரநோக்கற்ற வேலைகளால், பல்தேசிய நிறுவனங்கள் நாட்டின் இறையாண்மையைத் தமது கையில் எடுத்துச் செயற்பட்டு வருகின்றன.

நிறுவனங்களுக்குத் தன்னிச்சையாகச் செயற்பட இடமளித்து விட்டு அரசு செய்வதறியாது வேடிக்கை பார்க்கின்றது.

இதற்காகவா 69 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை தெரிவு செய்தனர்?.

அரசின் சில அமைச்சர்கள் தூதுரகங்களுக்குச் சென்று அடிபணியும் நிலைமையில் நாடு சர்வதேசத்துக்கு முன்னால் கேவலப்படுத்தப்பட்டுள்ளது.

இராஜதந்திரத்தை மறந்துள்ள அரசின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் இறையாண்மையுடன் விளையாடி வருகின்றனர்.

நாட்டின் இறையாண்மையுடன் இவ்வாறு விளையாட எவருக்கும் இடமளிக்க முடியாது. அரசின் இந்தத்  தான்தோன்றித்தனமான வேலைத்திட்டத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி குரல் கொடுக்கும்” – என்றார்.