போர்க்குற்றம் இழைத்தவர்கள் சர்வதேசத்துக்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்! – மாவை வலியுறுத்து

0
142
Article Top Ad

“இலங்கையில் போர்க்குற்றம் இழைத்தவர்கள், கொலைகளில் ஈடுபட்டவர்கள் சர்வதேசத்துக்குப் பதில் சொல்லும் கடப்பாட்டை ஏற்று பதில் சொல்லியே ஆகவேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

கொழும்பில் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச்சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் நேற்று (10) நடைபெற்றது.

நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை இழந்து 15ஆண்டுகள் ஆகிவிட்டாலும் எல்லோர் நெஞ்சிலும் அவரது அர்ப்பணம் நிறைந்து நிற்கின்றது. அந்த நாட்களில் ரவிராஜ் மூன்று மொழிகளிலும் அறிவும் ஆற்றலும் கொண்டவராக விளங்கினார்.

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக, விடுதலை எங்கள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக சர்வதேசத்துக்கு முன்னால், கொழும்பில் மனித உரிமைகள்  நிலையத்துக்கு முன்பாக, சிங்கள ஒலிபரப்புக்களில், சிங்கள மக்கள் மத்தியில் எங்கள் இனத்தின் விடுதலைக்கான தேவைப்பாட்டை வலியுறுத்தி தீவிர பிரசாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் தனது சட்டத்தரணி தொழிலை ஆற்றுவதற்காக நீதிமன்றம் செல்லும் வழியில் வழிமறிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலைக்கு அப்போது இருந்த அரசுதான் பொறுப்புக் கூற வேண்டி இருந்தது. இப்போதும் அதற்காகப் பொறுப்புக் கூற வேண்டும்.

ரவிராஜ் மட்டுமல்லாமல் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், பொதுமக்கள் என போரில் மட்டுமல்ல அரசின் உளவுத்துறையினரால், அவர்களுடைய ஆட்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களது எண்ணிக்கை எண்ணில் அடங்காது.

ரவிராஜின் நினைவு நாளில் அவர் மீது அன்பு பற்றுக் கொண்டவர்கள், இலட்சிய தாகம் கொண்டவர்கள் கூடி அஞ்சலி செலுத்தும்போது அவருடைய அர்ப்பணம், தியாகம் நினைவுகூரப்படுவது மட்டுமல்லாது அவர் ஆற்றிய தியாகத்தை, கடமை கண்ணியக் கடப்பாட்டைப் பின்பற்றி எங்கள் இனத்தின் விடுதலைக்காக உழைக்க வேண்டும். அதுவே நாம் அவருக்குச் செய்யும் அர்ப்பணம்” – என்றார்.